ஃபிஜி நாட்டில் பல தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் திட்டம் மத்திய அரசு நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டுக்கான இந்திய தூதரும் தமிழருமான பி.எஸ். கார்த்திகேயன் புதிய திட்டத்தை முறைப்படி தொடங்கிவைத்தார்.
இத்திட்டம் ராக்கிராக்கி என்ற பகுதியில் உள்ள "சங்கம்' என்ற இந்திய வம்சாவளியினர் நடத்தி வரும் அமைப்பு நிர்வகிக்கும் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஃபிஜி கல்வித் துறையுடன் சங்கம் என்று அழைக்கப்படும் தென்னிந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம் என்ற தமிழர் வம்சாவளியினருக்கான அமைப்பு சேர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.
இதன்படி இந்தியாவிலிருந்து இரு தமிழ் ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் ராக்கிராக்கியில் உள்ள ஒரு பள்ளியிலும் லபாசா என்ற பகுதியில் உள்ள சங்கம் அமைப்பின் தொடக்கப் பள்ளியிலும் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படும். இதற்கான நிதியுதவியை இந்திய அரசு வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் துவக்க விழாவில் இந்திய தூதர் பி.எஸ். கார்த்திகேயன் பேசுகையில், "கலாசாரத்தைப் பாதுகாப்பதிலும் வடிவமைப்பதிலும், பல்வேறு சமூகங்களுக்கிடையில் அதிக புரிதலை வளர்ப்பதிலும் ஒரு மொழியின் பங்கு இன்றியமையாதது. எட்டு கோடிக்கும் அதிகமானோரால் பேசப்படும் துடிப்புமிக்க உலகளாவிய மொழியான தமிழின் வளமான கலாசார மற்றும் மொழியியல் பாரம்பரியத்தை உணர்வது முக்கியம். தமிழ் மொழியைக் கற்கும் வாய்ப்பை தமிழர்களும் மொழி ஆர்வலர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.
இந்நிகழ்ச்சியில் சங்கம் அமைப்பின் பொதுச் செயலர் ஞானேஸ்வர் ராவ், கல்வித் துறைக்கான நிரந்தர பிரதிநிதி வுனிசியா, ஆர்.சி. மனுபாய் குழும தலைமை செயல் அதிகாரி உப்பிலியப்பன் கோபாலன், சங்கம் தலைமை செயல் அதிகாரி ஜெய் நாராயணன் மற்றும் இந்திய வம்சாவளியினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் நோக்கம் குறித்து "தினமணி' நிருபரிடம் கார்த்திகேயன் மேலும் கூறியது: 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்திலிருந்து எண்ணற்ற மக்கள் ஃபிஜி நாட்டில் குடியேறினர். தென்னிந்திய கிர்மிதியர்கள் என அழைக்கப்படும் அவர்களில் 70, 80 வயதுடையோர் மட்டுமே தற்போது தமிழைப் பேசுகின்றனர். அடுத்த தலைமுறையினர் காலப்போக்கில் கிட்டத்தட்ட தமிழை மறக்கும் நிலை இருக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது, இங்குள்ள தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட மக்கள் கணிசமாக இருப்பதை அறிந்து இங்கு வழக்கொழிந்து போகும் நிலையில் இருந்த தமிழ் மொழிக்கு புத்துயிரூட்டும் முன்முயற்சியை மத்திய அமைச்சர் தொடங்கினார்.
அதன் தொடர்ச்சியாக இந்தியாவிலிருந்து தமிழ் ஆசிரியர்களை வரவழைக்க கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்தோம். மொத்தம் மூன்று ஆசிரியர்களை இறுதி செய்ததில் இருவர் மட்டுமே வருவதாக உறுதியளித்தனர். அதில் ஒருவர் தற்போது பணியில் சேர்ந்து தமிழ் மொழியை கற்பிக்கத் தொடங்கியுள்ளார். மற்றவர் விரைவில் பணியில் சேருவார்.
ஃபிஜியில் பல்வேறு கல்வி நிறுவனங்களையும் கோயில்களையும் நடத்தி வரும் தமிழர் வம்சாவளியினர் பெரும்பான்மையாக உள்ள 'சங்கம்' அமைப்பின் ஒத்துழைப்பால் 100க்கும் அதிகமான இளம் தலைமுறையினர் இப்போது தமிழை கற்க ஆர்வமாகியுள்ளனர் என்றார் அவர்.