கோப்புப்படம்
கோப்புப்படம்

136 வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்: மக்களவையில் அமைச்சா் தகவல்

Published on

இந்தியாவில் நவ.21-ஆம் தேதி நிலவரப்படி 136 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், பயணிகளுக்கு நவீன வசதிகள் இந்த ரயிலில் உள்ளன என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து எழுத்துபூா்வ பதிலில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பதாவது:

வந்தே பாரத் ரயில்களில் பாதுகாப்பு அமைப்பான ‘கவச்’, ரயிலின் கதவுகள் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. குறைவான நேரத்தில் அதிவேகத்தை அடையும் திறன், சிறந்த பயண அனுபவம், சிறிய அளவிலான உணவு அறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வந்தே பாரத் ரயில்களில் உள்ளன.

நாட்டில் வந்தே பாரத் உள்பட புதிய ரயில் சேவைகளை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. அனுமதிக்கப்பட்ட உச்சபட்ச வேகத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில்களின் உச்சபட்ச வேகத்தை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை.

2024 முதல் 2025-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் வரையில் வந்தே பாரத் ரயில்களின் இருக்கைகள் 100 சதவீதத்துக்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டன. ‘ரயில் அனுபவ்’ இணையதளம் வழியாக பயணம் குறித்த தங்களது கருத்துகளை பயணிகள் பதிவிட்டுள்ளனா். வந்தே பாரத் ரயில் பயணம் குறித்து 2024, ஜூலை 3-ஆம் தேதி முதல், நவ.20-ஆம் தேதி வரையில் 51,346 கருத்துகள் ‘ரயில் அனுபவ்’ இணையதளம் வழியாக பெறப்பட்டுள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தனது பதிலில் தெரிவித்தாா்.