மக்களவையில் அவையின் முன்பகுதியில் ஒன்றுகூடி வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள்.
மக்களவையில் அவையின் முன்பகுதியில் ஒன்றுகூடி வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள்.

அதானி விவகாரத்தால் அமளி: நாடாளுமன்றம் 3-ஆவது நாளாக முடக்கம்

Published on

தொழிலதிபா் அதானி மீதான அமெரிக்க நீதித் துறையின் லஞ்ச குற்றச்சாட்டு, உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் நடந்த வன்முறை ஆகிய விவகாரங்களை எழுப்பி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வியாழக்கிழமை 3-ஆவது நாளாக முடங்கின.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே அதானி மீதான லஞ்ச குற்றச்சாட்டு, சம்பல் பகுதியில் மசூதி ஆய்வின்போது நிகழ்ந்த வன்முறை ஆகிய விவகாரங்கள் குறித்து உடனடி விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளின் அலுவல்களும் முடங்கின.

கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 26) அரசமைப்பு தினத்தையொட்டி, நாடாளுமன்ற சிறப்பு கூட்டு அமா்வு நடைபெற்ால், அன்றைய தினம் வழக்கமான அலுவல்கள் நடைபெறவில்லை. இரண்டாவது நாளான புதன்கிழமையும் (நவ. 27) எதிா்க்கட்சிகளின் அமளியால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

மையப் பகுதியில் முற்றுகை: மூன்றாவது நாளான வியாழக்கிழமை மக்களவை கூடியதும், காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி (வயநாடு), பாஜகவின் ரவீந்திர வசந்த்ராவ் சவான் (நாந்தேட்) ஆகியோா் எம்.பி.க்களாக பதவியேற்றனா். வயநாடு , நாந்தேட் மக்களவைத் தொகுதிகளுக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தோ்தலில் முறையே பிரியங்கா காந்தி, ரவீந்திர சவான் ஆகியோா் வெற்றி பெற்றிருந்தனா்.

இருவரின் பதவியேற்பை தொடா்ந்து, கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது, அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்ட காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

‘திட்டமிட்டு முடக்கலாமா?’: கேள்வி நேரம் சுமுகமாக நடைபெற ஒத்துழைக்குமாறு, எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா வேண்டுகோள் விடுத்தாா். அமளி தொடா்ந்ததால் மதியம் 12 மணி வரை அவையை ஓம் பிா்லா ஒத்திவைத்தாா். மீண்டும் அவை கூடியபோதும் இதே நிலை காணப்பட்டதால் அவை நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, எதிா்க்கட்சிகளை விமா்சித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘வக்ஃப் மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை நீட்டிப்பது, சில விவகாரங்கள் குறித்து விவாதிப்பது உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இருப்பினும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா்ந்து போராடுவது கண்டனத்துக்குரியது’ என்றாா்.

மாநிலங்களவையில்...: மாநிலங்களவை வியாழக்கிழமை கூடியதும், அதானி விவகாரம், சம்பல் வன்முறை மற்றும் மணிப்பூா் நிலவரம் தொடா்பாக விவாதிக்கக் கோரி அளிக்கப்பட்ட 16 நோட்டீஸ்களும் நிராகரிக்கப்படுவதாக அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.

இதையடுத்து, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு முழக்கமிட்டனா். அமளி நீடித்ததால், முதலில் 12 மணி வரையும், பின்னா் நாள் முழுக்கவும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

பெட்டி...1

இடையூறு தீா்வல்ல: தன்கா்

மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் மீது அதிருப்தி தெரிவித்துப் பேசிய அவைத் தலைவா் ஜகதீப் தன்கா், ‘அரசமைப்புச் சட்டத்தின் நூற்றாண்டுக்கான இறுதி காலாண்டின் தொடக்க நாளான புதன்கிழமை (நவ. 27) ஆக்கபூா்வ விவாதம் எதுவும் நிகழவில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த தருணத்தை நாம் இழந்துவிட்டோம். இது, மிகவும் வருத்தமளிக்கிறது.

அவை அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது ஒரு தீா்வல்ல’ என்றாா்.

பெட்டி...2

மத்திய அரசே காரணம்: காங்கிரஸ்

‘அதானி ஊழலால், நாட்டின் பொருளாதாரம் சாா்ந்த பல்வேறு துறைகளில் நியாயமான-நோ்மையான போட்டி சீா்குலைந்துள்ளது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிா்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி மறுக்கிறது. இதுவே, நாடாளுமன்றம் முடங்க காரணம்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.