மகாராஷ்டிரத்தின் காபந்து முதல்வராக இருக்கும் எனது தந்தை ஏக்நாத் ஷிண்டே "கூட்டணி தர்மத்தைப்" பின்பற்றுவதில் முன்மாதிரியா இருப்பதற்காக பெருமைப்படுவதாக சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே கூறினார்.
முன்னதாக மகாராஷ்டிர முதல்வர் பதவிக்கான போட்டியிலிருந்து சிவசேனை கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே விலகினார். புதிய முல்வரைத் தேர்வு செய்வதில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்று அவர் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவின் எக்ஸ் பதிவில்,
தனது தந்தைக்கு மகாராஷ்டிர மக்களுடன் பிரிக்கமுடியாத பிணைப்பு உள்ளது. அவர் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்காகவும் இரவும் பகலும் உழைத்தார்.
பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஷாவிடம் பேசியதாகவும், மாநிலத்தில் புதிய ஆட்சி அமைப்பதில் தனது தரப்பிலிருந்து எந்த தடையும் இருக்காது என்று உறுதியளித்ததாகவும் காபந்து முதல்வர் கூறியுள்ளார்.
“எனது தந்தை மற்றும் சிவசேனாவின் தலைமைத்துவத்தால் நான் பெருமைப்படுகிறேன் என்று அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது நம்பிக்கை வைத்து, தனது தனிப்பட்ட லட்சியத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டணி தர்மத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். தனது தந்தை "பொது மனிதராக" பணியாற்றியதாகவும், முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மக்களுக்காக திறந்து வைத்ததாகவும் அவர் கூறினார்.
பொதுவாக முதல்வர் பதவி அனைவரையும் கவர்ந்திழுக்கும். ஆனால் ஏக்நாத் ஷிண்டே விதிவிலக்கு. அவரைப் பொறுத்தவரை, தேசம் மற்றும் மக்களுக்குச் சேவை செய்வதே முதன்மையானது மற்றும் அவரது மரபு எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும் என்றார்.
நவம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. புதிய அரசாங்கத்தை அமைப்பதில் சிவசேனா ஒரு தடையாக இருக்காது என்று ஷிண்டே அறிவித்துள்ள நிலையில், இரண்டு முறை பாஜக முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் அடுத்த முதல்வராகப் பதவியேற்பாரா? அல்லது அஜித் பவாருக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.