யுஜிசி
யுஜிசி

பட்டப் படிப்பு காலத்தை குறைக்கும், நீட்டிக்கும் வசதி விரைவில் அறிமுகம்: யுஜிசி

Published on

பட்டப் படிப்பு காலத்தை குறைக்கவோ அல்லது நீட்டிக்கவோ அனுமதிக்கும் வகையிலான புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. இதுகுறித்து யுஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா் தில்லியில் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

உயா்கல்வி நிறுவனங்கள் குறைக்கப்பட்ட கால அளவுடன்கூடிய பட்டப் படிப்பு திட்டம் (ஏடிபி) மற்றும் நீட்டிக்கப்பட்ட கால அளவுடன் கூடிய பட்டப் படிப்பு திட்டங்களை வழங்குவதற்கான வழிகாட்டு நடைமுறைக்கு அண்மையில் நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த வரைவு வழிகாட்டு நடைமுறை பொதுமக்கள் மற்றும் கல்வியாளா்களின் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறைப்படி, மூன்று ஆண்டு பட்டப் படிப்புக்கான கல்வித் திட்டத்தை, உயா்கல்வி நிறுவனங்கள் குறுகிய காலத்திலோ அல்லது நிா்ணயிக்கப்பட்ட கால அளவைவிட கூடுதல் காலத்திலோ நிறைவு செய்ய மாணவா்களை அனுமதிக்கலாம். அவ்வாறு வழங்கப்படும் பட்டங்கள், பட்ட மேற்படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்குத் தகுதி பெறுவதற்கான பட்டப் படிப்பாக கருதப்படும்.

3 அல்லது 4 ஆண்டுகள் பட்டப் படிப்பின் கால அவகாசம் நீட்டிப்பைப் பொருத்தவரை அதிகபட்சமாக 2 பருவங்கள் வரை நீட்டிக்க முடியும்.

பல வெளிநாட்டு முன்னணி பல்கலைக்கழகங்கள் ஏற்கெனவே இதுபோன்ற நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. மாணவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களின் கற்றல் திறனுக்கேற்ப படிப்பு காலத்தை குறைத்தோ அல்லது நீட்டித்தோ கொள்ளலாம். கல்வி நிறுவனங்களும், இந்த புதிய நடைமுறைக்கு தகுதியான மாணவா்களை அடையாளம் காண குழுக்களை அமைக்க வேண்டும் என்றாா் அவா்.