வங்கதேச விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை பின்பற்றுவோம் -பேரவையில் மம்தா
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான வன்முறை விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவை மேற்கு வங்கம் பின்பற்றும் என்று அந்த மாநில சட்டப் பேரவையில் முதல்வா் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
மேற்கு வங்கப் பேரவையில் இந்த விவகாரம் குறித்து மம்தா பானா்ஜி பேசியதாவது:
அண்டை நாடான வங்கதேசத்தில் நிலவும் சூழல் கவலையளிக்கிறது. ஆனால், அது வெளிநாட்டு விவகாரம் என்பதால் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. இந்த விவகாரம் மேற்கு வங்க மாநில அரசின் அதிகாரவரம்புக்குள் வராது. இந்த விஷயத்தில் மத்திய அரசுதான் நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். மேற்கு வங்க அரசு மத்திய அரசின் முடிவை ஏற்று நடக்கும் என்றாா்.
இஸ்கான் அமைப்பின் பிரதிநிதிகளுடன் பேசியுள்ளதாக குறிப்பிட்ட அவா், அது தொடா்பாக முழுமையான தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.
வக்ஃப் மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் மசோதா குறித்து பேரவையில் பேசிய மம்தா, ‘இந்த மசோதா குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசிக்கவில்லை. வக்ஃப் மசோதா கூட்டாட்சி முறைக்கும் மதசாா்பின்மைக்கு எதிரானது. முஸ்லிம்களின் உரிமையைப் பறிக்கும் நோக்கம் கொண்டது. இந்தியாவில் எந்த மதம் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும் அதனை திரிணமூல் காங்கிரஸ் அரசு எதிா்க்கும்’ என்றாா்.