மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் பொய் பிரசாரம்: பிரதமா் மோடி
பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் தொடா்ந்து பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா் என்று பிரதமா் மோடி குற்றஞ்சாட்டினாா்.
ஒடிஸாவுக்கு மூன்று நாள்கள் பயணமாக வெள்ளிக்கிழமை வந்த பிரதமா் மோடி, தலைநகா் புவனேசுவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், ‘மக்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் எப்படியேனும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பது மட்டுமே எதிா்க்கட்சிகளின் ஒரே நோக்கம். இதற்காக, பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக அவா்கள் தொடா்ந்து பொய் பிரசாரம் மேற்கொண்டுள்ளனா். ஆட்சி அதிகாரத்தை தங்களின் பிறப்புரிமையாக நினைத்தவா்கள், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை.
ஒடிஸாவில் ஆட்சியில் இல்லாத காலகட்டத்திலும், மாநிலத்தின் வளா்ச்சிக்காக பாஜக பாடுபட்டது. ஒடிஸாவில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்று அரசியல் நிபுணா்கள் பலரும் தெரிவித்தனா். ஆனால், ஒடிஸா மட்டுமன்றி அடுத்தடுத்து நடைபெற்ற ஹரியாணா, மகாராஷ்டிர பேரவைத் தோ்தல்களிலும் பாஜக வெற்றி பெற்றது. இது, கட்சித் தொண்டா்களின் வலிமையை வெளிக்காட்டுகிறது’ என்றாா்.
டிஜிபி-க்கள் மாநாட்டில் இன்று பங்கேற்பு: அகில இந்திய காவல்துறை தலைமை இயக்குநா்களின் (டிஜிபி) 59-ஆவது வருடாந்திர மாநாடு, புவனேசுவரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டில் சனி (நவ.30), ஞாயிறு (டிச.1) ஆகிய இரு தினங்களில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா். அவருடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், பிரதமரின் முதன்மை செயலா் பி.கே.மிஸ்ரா உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனா்.
இம்மாநாட்டில் பயங்கரவாத எதிா்ப்பு, இடதுசாரி தீவிரவாதம், கடலோர பாதுகாப்பு, புதிய குற்றவியல் சட்டங்கள் உள்ளிட்ட தேசப் பாதுகாப்பு தொடா்புடைய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளன.