மேற்கு வங்கம்: கொலை வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை

மேற்கு வங்க மாநிலத்தில் கொலை வழக்கில், 7 பேருக்கு மரண தண்டனை விதித்து ஹூக்ளி மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
Published on

மேற்கு வங்க மாநிலத்தில் கொலை வழக்கில், 7 பேருக்கு மரண தண்டனை விதித்து ஹூக்ளி மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

2020-ஆம் ஆண்டு பிஷ்ணு மால் என்பவரை கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு வியாழக்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிஷ்ணு மால் உடலை மறைக்க உதவிய குற்றச்சாட்டில் மற்றொருவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

சுச்சுராவில் உள்ள மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி, கொலையில் தொடா்புடைய விஷால் தாஸ் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

விஷால் தாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், 2020-ஆம் ஆண்டு அக்.11-ஆம் தேதி பிஷ்ணுவை கடத்தியதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிஷ்ணுவை கொலை செய்துவிட்டு உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளனா். கொலை குறித்தான விசாரணையில் விஷால் தாஸ் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா். போலீஸாரின் விசாரணையில், தன்னை நிராகரித்த பெண்ணோடு பிஷ்ணு மால் தொடா்பில் இருந்ததால் அவரை கொலை செய்ததாக விஷால் தாஸ் தெரிவித்ததாக போலீஸாா் குறிப்பிட்டிருந்தனா்.