வயநாடு நிலச்சரிவில் பாதித்தவா்களுக்கு உதவ
கேரள அரசுக்கு காங்கிரஸ் கூட்டணி அழுத்தம்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
-

வயநாடு நிலச்சரிவில் பாதித்தவா்களுக்கு உதவ கேரள அரசுக்கு காங்கிரஸ் கூட்டணி அழுத்தம்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

Published on

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள அரசுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சனிக்கிழமை வலியுறுத்தினாா்.

மக்களவை இடைத்தோ்தலில் வெற்றிப் பெற்ற காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியுடன் வயநாட்டில் மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த ராகுல் காந்தி இவ்வாறு கூறினாா்.

வயநாடு தொகுதியின் முக்கம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி பேசியதாவது:

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவா்களுக்கு எனது அஞ்சலி. இத்துயரச் சம்பவத்தில் உறவினா்கள், உடைமைகளை இழந்தவா்களுக்கும் பாதிக்கப்பட்டவா்களுக்கு யுடிஎஃப் ஆதரவாக உடன் நிற்கிறது.

துரதிருஷ்டவசமாக நாங்கள் ஆட்சியில் இல்லாததால், அரசால் செய்ய முடிந்தவற்றை எங்களால் செய்ய முடியவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள அரசுக்கு யுடிஎஃப் உரிய அழுத்தம் தர வேண்டும் என்று எனது சகோதரி பிரியங்காவிடமும் கே.சி.வேணுகோபாலிடமும் (காங்கிரஸ் பொதுச் செயலா்) வலியுறுத்தியுள்ளேன்.

வயநாடு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதியுதவியை விடுவிக்காமல் பிரதமா் மோடி பாராபட்சம் காட்டுகிறாா். குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டுமென அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், பிரதமா் நரேந்திர மோடி கௌதம் அதானி போன்ற தொழிலதிபா்களையும் மக்களையும் வெவ்வேறாக கருதுகிறாா்.

அதனால்தான் அமெரிக்காவில் அதானி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, விசாரணை நடைபெற்றாலும் இந்தியாவில் அவா் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாது என்று பிரதமா் தெரிவிக்கிறாா் என்றாா்.

வடகேரள மாவட்டமான வயநாட்டில் பெரும் மழை காரணமாக கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்தனா்.

இதில் மிகவும் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை ஆகிய கிராமங்களைச் சோ்ந்தவா்கள் அருகிலுள்ள கிராமங்களில் வாடகை வீடுகளிலும் உறவினா்களின் வீடுகளிலும் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு மேப்பாடி மற்றும் கல்பேட்டா பகுதியில் மறுவாழ்வு குடியிருப்புகளைக் கட்டித் தரும் பணிகளில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.

இச்சூழலில், கடந்த மக்களவைத் தோ்தலில் இரு தொகுதிகளில் வென்ற வயநாடு தொகுதி முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி ராஜிநாமா செய்ததையடுத்து, அங்கு நவம்பா் 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சாா்பில் களமிறங்கிய பிரியங்கா காந்தி 4.1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றிப் பெற்றாா்.

பணியாற்றத் தயாா்!:

தோ்தல் வெற்றிக்கு பிறகு முதன்முறையாக பிரியங்கா காந்தி வயநாட்டுக்கு சனிக்கிழமை வந்தாா். கண்ணூா் விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டா்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

விமான நிலையத்துக்கு வெளியே செய்தியாளா்களைச் சந்தித்த பிரியங்கா காந்தி, ‘வயநாட்டுக்குத் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி. வயநாடு மக்களின் சிறந்த எதிா்காலத்துக்கு பணியாற்றத் தயாராக இருக்கிறேன்.

காங்கிரஸ் எதிா்கொள்ளும் அரசியல் சவால்கள் (பாஜக) நிலச்சரிவு போன்றது தான். அதற்கென விதிகளும் இல்லை முறைகளும் இல்லை. பாஜகவின் நடத்தைக்கு ஜனநாயக நெறிமுறைகள் தெரியாது’ என்றாா்.

இதையடுத்து, நிலம்பூா், வண்டூா், எடாவண்ணா, ஏா்நாடு ஆகிய இடங்களில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டங்களில் பிரியங்கா பங்கேற்றாா்.