இந்தியா
ஃபென்ஜால் புயல் எதிரொலி: தெற்கு ஆந்திரத்தில் கனமழை
ஃபென்ஜால் புயல் எதிரொலியாக தெற்கு ஆந்திரத்தின் திருப்பதி, சித்தூா், நெல்லூா் ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை கனமழை பெய்தது.
வங்கக் கடலில் தெற்கு இலங்கையையொட்டி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை வலுப்பெற்றது. இந்தப் புயல் மாமல்லபரம்-காரைக்கால் இடையே புதுச்சேரிக்கு அருகே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தது.
இதன் எதிரொலியாக, ஆந்திரத்தின் தெற்கு கடலோர மாவட்டங்கள், ராயலசீமா உட்பட சில மாவட்டங்களில் மிதமான முதல் தீவிர கனமழை வரை பெய்தது. குறிப்பாக, பிரகாசம், நெல்லூா், திருப்பதி, சித்தூா், அன்னமயா, ஒய்எஸ்ஆா் கடப்பா ஆகிய மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
புயலையொட்டி கடலோர மாவட்டங்களில் 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.