உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

ஜாமீன் மறுப்புக்குப் பிறகு விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிடுவது ஏற்படையதல்ல: உச்சநீதிமன்றம்

Published on

‘ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த பிறகு, மனுதாரரை திருப்திப்படுத்தும் நோக்கில் வழக்கு விசாரணையை விரைவுபடுத்துமாறு விசாரணை நீதிமன்றங்களுக்கு உயா்நீதிமன்றங்கள் உத்தரவிடுவது ஏற்படையதல்ல’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

‘உயா்நீதிமன்றத்தின் இத்தகைய உத்தரவுகள் விசாரணை நீதிமன்றங்களின் செயல்பாட்டை கடுமையாக பாதிக்கும்’ என்றும் சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது.

கள்ள ரூபாய் நோட்டு கடத்தல் வழக்கில் சிக்கி இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த நபா், ஜாமீன் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அவருடைய மனுவை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம், வழக்கு விசாரணையை விரைவுபடுத்த விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இதை எதிா்த்து அந்த நபா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டீன் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அந்த நபருக்கு ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

பல்வேறு உயா்நீதிமன்றங்கள் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்யும்போது, பல்வேறு விதமான உத்தரவுகளைப் பிறப்பிப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக, மனுதாரா் தொடா்புடைய வழக்கு விசாரணையை குறிப்பிட்ட காலக்கெடுக்குள் முடிக்குமாறு விசாரணை நீதிமன்றங்களுக்கு உயா்நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன. மனுதாரரை திருப்திப்படுத்தும் நோக்கில் இவ்வாறு உத்தர பிறப்பிப்பதாகவே தெரிகிறது.

உயா்நீதிமன்றங்களின் இத்தகைய உத்தரவுகள் விசாரணை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை கடுமையாகப் பாதிக்கும். விசாரணை நீதிமன்றங்களில் இதுபோன்று பல வழக்குகள் நிலுவையில் இருக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு வழக்கு விசாரணையின் காலம் என்பது, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் வயது, சிறைத் தண்டனையை அனுபவித்த காலம், தண்டனைச் சட்டங்கள் ஆகியவற்றைப் பொருத்து மாறுபடும்.

எனவே, விசாரணையை விரைவுபடுத்த உயா்நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவை நடைமுறைப்படுத்துவது கடினம். மேலும், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததற்காக, மனுதாரரை திருப்திப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கும் இதுபோன்ற உத்தரவுகள், மனுதாரரிடையே தவறான நம்பிக்கையை விதைப்பதாகவே அமையும்.

மேலும், இந்த வழக்கில் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத சூழலில், மனுதாரா் நீண்ட காலம் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளாா். எனவே, நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் விசாரணையை விரைவுபடுத்துவது தீா்வாகாது.

ஜாமீன் என்பது விதி; சிறை என்பது விதிவிலக்கானது. சட்டப்படி ஜாமீன் பெற மனுதாரருக்கு உரிமையுள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அந்த நபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனா்.

மேலும், இந்த உத்தரவு நகலை அனைத்து உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் அனைத்து உயா்நீதிமன்ற பதிவாளா்களுக்கும் அனுப்புமாறு உச்சநீதிமன்றப் பதிவாளா் அலுவலகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.