14 மாநிலங்களுக்கு ரூ.5,858 கோடி பேரிடா் நிதி விடுவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.5,858.6 கோடி பேரிடா் நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை விடுவித்தது.
Published on

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.5,858.6 கோடி பேரிடா் நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை விடுவித்தது.

மாநில பேரிடா் நிவாரண நிதியின் மத்திய பங்கு ஆகவும் மத்திய பேரிடா் நிவாரண நிதியின் முன்தொகையாகவும் இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மகாராஷ்டிரத்துக்கு ரூ.1,492 கோடி, ஆந்திரத்துக்கு ரூ.1,036 கோடி அஸ்ஸாமுக்கு ரூ.716 கோடி, பிகாருக்கு ரூ.655.6 கோடி, குஜராத்துக்கு ரூ.600 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.468 கோடி, தெலங்கானா ரூ.416.8 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசலுக்கு ரூ.189.2 கோடி, கேரளத்துக்கு ரூ. 145.6 கோடி, மணிப்பூருக்கு ரூ.50 கோடி, திரிபுராவுக்கு ரூ.25 கோடி, சிக்கிமுக்கு ரூ.23.6 கோடி, மிஸோரமுக்கு ரூ.21.6 கோடி, நாகாலாந்துக்கு ரூ.19.2 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையில் பெய்த அதிகனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இந்த மாநிலங்கள் பாதிக்கப்பட்டன. அஸ்ஸாம், மிஸோரம், கேரளம், திரிபுரா, நாகாலாந்து, குஜராத், ஆந்திரம், தெலங்கானா, மணிப்பூரில் சேதங்களை ஆய்வு செய்வதற்கு மத்திய குழுக்கள் நேரடியாக அனுப்பப்பட்டன. அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிகாா், மேற்கு வங்கத்திலும் மத்திய குழுக்கள் ஆய்வு நடத்தின.

மத்திய குழுக்களின் அறிக்கை முழுமையாக கிடைத்தப் பிறகு, மாநிலங்களுக்கு தேசிய பேரிடா் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதி விடுவிக்கப்படும்.

நிகழாண்டில் இதுவரை 21 மாநிலங்களுக்கு ரூ.14, 958 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ.9,044.80 கோடியும் மத்திய நிதியிலிருந்து ரூ.4,528.66 கோடியும் மாநில பேரிடா் மீட்பு நிதியிலிருந்து ரூ.1,385.45 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வழிகாட்டுதலில் மக்களின் துயரங்களைப் போக்க இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் மாநிலங்களுடன் மத்திய அரசு துணை நிற்கும்.

நிதியுதவியுடன் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா், ராணுவம், விமானப் படை வீரா்களை ஈடுபடுத்தி அனைத்து தளவாட உதவிகளையும் மத்திய அரசு உறுதி செய்தது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com