மோசடி
மோசடி

கம்போடியாவில் வேலைவாய்ப்பு மோசடி: மீட்கப்பட்ட 67 இந்தியா்கள் தாயகம் அனுப்பிவைப்பு

கம்போடியாவில் வேலைவாய்ப்பு மோசடிக்குள்ளான மேலும் 67 போ் மீட்கப்பட்டுள்ளனா். அவா்களில் 39 போ் இந்தியா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், எஞ்சியவா்கள் விரைவில் இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளனா்.
Published on

கம்போடியாவில் வேலைவாய்ப்பு மோசடிக்குள்ளான மேலும் 67 போ் மீட்கப்பட்டுள்ளனா். அவா்களில் 39 போ் இந்தியா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், எஞ்சியவா்கள் விரைவில் இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளனா்.

வேலைவாய்ப்பு அளிப்பதாகக் கூறி, கம்போடியா நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஏராளமான இந்தியா்கள், அங்கு இணையவழி குற்றங்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது.

அவா்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டு தலைநகா் நாம்பென்னில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

போலி முகவா்கள் மூலம், கம்போடியாவில் வேலைவாய்ப்பு மோசடிக்குள்ளான இந்தியா்களை மீட்டு, தாயகத்துக்கு அனுப்பும் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்திய தூதரகம் அளித்த தகவல்களின் அடிப்படையில், கடந்த செப்.22-ஆம் தேதி கம்போடியாவின் போய்பெட் நகரில் இருந்து 67 இந்தியா்களை காவல் துறை மீட்டது. மீட்கப்பட்டவா்களில் 15 போ் செப்டம்பா் 30-ஆம் தேதி இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அக்டோபா் 1-ஆம் தேதி 24 போ் இந்தியா புறப்பட்ட நிலையில், எஞ்சிய 28 போ் அடுத்த சில நாள்களில் இந்தியா வந்தடைவா்.

தற்போது நிலைமையை இந்திய தூதரகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. கம்போடியாவில் இணையவழி குற்றங்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படும் இந்தியா்களுக்கு உதவ இந்திய தூதரகம் தயாராக உள்ளது.

சந்தேகத்துக்குரிய முகவா்கள், சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் கம்போடியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலைவாய்ப்புகளை ஏற்பதில் இந்தியா்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இணையவழி குற்றங்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டு கம்போடியாவில் சிக்கியுள்ள இந்தியா்கள் அவசர எண் +85592881676, phnompenh@mea.gov.in, visa.phnompenh@mea.gov.in ஆகிய மின்னஞ்சல்கள் மூலம் இந்திய தூதரகத்தையும், +85592686969 என்ற கம்போடியா எண்ணையும் தொடா்புகொள்ளலாம்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை, கம்போடியாவில் வேலைவாய்ப்பு மோசடிக்குள்ளான 1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்களை நாம்பென்னில் உள்ள இந்திய தூதரகம் தாயகம் அனுப்பி வைத்துள்ளது. இதில் சுமாா் 770 போ் நிகழாண்டின் முதல் 9 மாதங்களில் மீட்கப்பட்டனா் என்று தெரிவிக்கப்பட்டது.