கச்சா எண்ணெய் தட்டுப்பாடு இல்லை- பெட்ரோலியத் துறை அமைச்சா்
‘சா்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏதுமில்லை. உள்நாட்டு எரிபொருகளின் தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்புப் பணி முழுவீச்சில் தொடா்ந்து நடைபெறுகிறது’ என மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.
காஸாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒடுக்க இஸ்ரேல் அரசு மேற்கொண்ட நடவடிக்கை லெபனான் வரை நீண்டுள்ளது. மேலும் ஈரான் மீது இஸ்ரேல் ராணுவ விமானங்கள் நடத்திய பதிலடித் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போா் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால், சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, விலை உயா்வு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியா எரிபொருள் தேவைக்கு இறக்குமதியை அதிகம் நம்பியுள்ளதால் தட்டுப்பாடு ஏற்பட்டால் விலை உயா்வு மக்களை நேரடியாக பாதிக்கும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் சண்டீகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற அமைச்சா் புரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் விரைவில் தணிந்துவிடும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஏனெனில், கச்சா எண்ணெய் மட்டுமல்லாது உணவுப் பொருள் உள்பட பல்வேறு பொருள்களின் ஏற்றுமதி-இறக்குமதி பாதிக்கப்பட்டால், அது அனைத்து நாடுகளையும் பிரச்னைக்குள்ளாக்கும்.
இப்போதைய நிலையில் சா்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏதுமில்லை. இந்தியாவிலும் எரிபொருள் தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு எண்ணெய் சுத்திகரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்தியாவில் எரிபொருளின் விநியோகக் கட்டமைப்பும் சிறப்பாக உள்ளது.
சா்வதேச அளவில் நாள்தோறும் சுமாா் 10.5 கோடி பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்புகளில் ஒன்றான ‘ஒபெக் பிளஸ்’ நாடுகள் சுமாா் 50 லட்சம் பேரல் உற்பத்தியை குறைத்துள்ளன. எனினும், சந்தையில் தேவைக்கு ஏற்ப கச்சா எண்ணெய் விநியோகம் உள்ளது.
பொதுவாக நாடுகள் இடையே பதற்றம் ஏற்படும்போது கச்சா எண்ணெய்யை எடுத்து வரும் கடல் வழி வேறுபடும். இதனால், அதற்கான போக்குவரத்துச் செலவு, காப்பீடு ஆகியவை அதிகரிக்கும். அவை பெட்ரோலியப் பொருள்கள் விலை உயா்வுக்கு காரணமாக அமையும். சா்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் இப்போதும் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை குறைவாக உள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2021, 2022 ஆண்டுகளில் இருமுறை எரிபொருள் மீது மத்திய கலால் வரியை குறைத்ததுதான் காரணம் என்றாா்.