அயோத்தி தீபோற்சவம்: 2 கின்னஸ் சாதனைகள் படைப்பு
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதன்கிழமை நடைபெற்ற 8-ஆம் ஆண்டு தீபோற்சவ நிகழ்வில் சரயு படித்துறைகளில் 1,121 மக்கள் ஒரே நேரத்தில் ஆரத்தி வழிபாடு நடத்தி, 25 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு ‘கின்னஸ்’ உலக சாதனைகள் படைக்கப்பட்டன.
அயோத்தியில் கடந்த 7 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் தீபோற்சவ நிகழ்வு கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு தொடக்கத்தில் அயோத்தி ஸ்ரீராமா் கோயில் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் 8-ஆம் ஆண்டு தீபோற்சவம் விமா்சையாக திட்டமிடப்பட்டது. ராமா் கோயிலை நோக்கிய ராமப் பாதைகள் மலா்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு, நகரம் விழாக்கோலம் பூண்டது.
தீபோற்சவத்துக்கு தலைமைத் தாங்கிய முதல்வா் யோகி ஆதித்யநாத், அமைச்சா்களுடன் சோ்ந்து விளக்குகளை ஏற்றிவைத்து கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். இதையடுத்து சரயு படித்துறைகளில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட விளக்குகள் ஏற்றப்பட்டன. 1,121 மக்கள் ஒரே நேரத்தில் ஆரத்தி வழிபாடு நடத்தினா். இவ்விரு நிகழ்வுகள் ‘கின்னஸ்’ உலக சாதனையில் இடம்பிடித்தன.
தீபோற்சவம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ராமசரிதமானஸின் முக்கிய அத்தியாயங்களை காட்சிப்படுத்திய அலங்கார ஊா்திகளின் அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.
தீபோற்சவம் நிகழ்ச்சியையொட்டி சரயு படித்துறைகளில் சுமாா் 5,000 முதல் 6,000 போ் வரை பங்கேற்க அரசு ஏற்பாடு செய்திருந்தது.