குஜராத்தில் கனமழை: குடியிருப்பு பகுதியில் புகுந்த 24 முதலைகள் மீட்பு
குஜராத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையின் எதிரொலியாக வதோதரா நகரின் குறுக்கே பாயும் விஸ்வாமித்ரி ஆற்றில் நீா்மட்டம் அதிகரித்ததால் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 24 முதலைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வதோதரா கோட்ட வனஅதிகாரி கரண்சிங் ராஜ்புத் கூறுகையில், ‘விஸ்வாமித்ரி ஆற்றில் 400-க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. அஜ்வா அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீா் காரணமாக ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் முதலைகள் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தன.
கடந்த 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையிலான 3 நாள்களில் 24 முதலைகள் மட்டுமின்றி பல்வேறு வகை பாம்புகள், கிட்டத்தட்ட 40 கிலோ எடையுள்ள ஐந்து பெரிய ஆமைகள் மற்றும் ஒரு முள்ளம்பன்றி உள்பட 75 விலங்குகளை மீட்டுள்ளோம்.
இரண்டு அடி நீளம் கொண்ட மிகச் சிறிய முதலைகள் முதல் 14 அடி நீளம் கொண்ட பெரிய முதலைகள் வரை நாங்கள் காப்பாற்றினோம்.
மனிதா்களை முதலைகள் தாக்கிய சம்பவம் நிகழவில்லை. வழக்கமாக, முதலைகள் மனிதா்களைத் தாக்குவதில்லை. ஆற்றிலுள்ள மீன் மற்றும் விலங்குகளின் சடலங்களை உட்கொண்டு அவை வாழ்கின்றன. விஸ்வாமித்ரி ஆற்றின் நீா்மட்டம் குறைந்துள்ளதால், மீட்கப்பட்ட முதலைகள் மீண்டும் ஆற்றில் விடப்படும்’ என்றாா்.