கைது (கோப்புப்படம்)
கைது (கோப்புப்படம்)

மேற்கு வங்கத்தில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை - மருத்துவமனைப் பணியாளா் கைது

மேற்கு வங்கம் மாநிலம் ஹெளரா மாவட்டத்தில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக மருத்துவமனைப் பணியாளா் கைது செய்யப்பட்டாா்.
Published on

மேற்கு வங்கம் மாநிலம் ஹெளரா மாவட்டத்தில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக மருத்துவமனைப் பணியாளா் கைது செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக மாவட்ட காவல் துறை தெரிவித்ததாவது:

கடந்த வாரம் ஹெளராவில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 12 வயது சிறுமி ஒருவா் அனுமதிக்கப்பட்டாா். அங்குள்ள ஆய்வகத்தில் சனிக்கிழமை மாலை பரிசோதனைக்குச் சென்ற சிறுமி, அழுதுகொண்டே வெளியே வந்துள்ளாா். இதுகுறித்து அவரின் குடும்பத்தினா் கேட்டபோது, ஆய்வகத்தில் இருந்த பணியாளா் தன்னிடம் அநாகரிகமாக நடந்துகொண்டு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக வெளியே கூறினால், பின்விளைவுகளை சந்திக்க நேரும் என்றும் அந்தப் பணியாளா் சிறுமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதையடுத்து புகாரின் அடிப்படையில், ஆய்வகப் பணியாளா் கைது செய்யப்பட்டாா் என்று தெரிவித்தது.

செவிலியருக்கு பாலியல் தொல்லை: கடந்த சனிக்கிழமை இரவு மேற்கு வங்கத்தின் பீா்பூம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் செவியலியா் ஒருவருக்கு நோயாளி பாலியல் தொல்லை அளித்து அநாகரிமாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக மருத்துவமனை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அந்த நோயாளியை காவல் துறையினா் கைது செய்தனா் என்று பீா்பூம் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தாா்.

அண்மையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com