கே.சி.தியாகி
கே.சி.தியாகி

ஜேடியு தேசிய செய்தித் தொடா்பாளா் கே.சி.தியாகி திடீா் ராஜிநாமா

பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் (ஜேடியு) தேசிய செய்தித் தொடா்பாளா் கே.சி.தியாகி தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
Published on

பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் (ஜேடியு) தேசிய செய்தித் தொடா்பாளா் கே.சி.தியாகி தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணியிலிருக்கும் பாஜகவின் நிலைப்பாட்டுக்கு எதிராக பல்வேறு விஷயங்களில் கருத்துகளைக் கூறிவந்த தியாகி, தற்போது செய்தித் தொடா்பாளா் பதவியில் இருந்து விலகியுள்ளாா்.

இதுதொடா்பாக ஐக்கிய ஜனதா தளம் வெளியிட்ட அறிக்கையில், ‘கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளராக இருந்த கே.சி.தியாகி தனிப்பட்ட காரணங்களுக்காக அப்பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, புதிய தேசிய செய்தித் தொடா்பாளராக ராஜீவ் ரஞ்சன் பிரசாத்தை பிகாா் முதல்வரும், கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் நியமித்துள்ளாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜிநாமா குறித்து நிதீஷ்குமாருக்கு தியாகி எழுதிய கடிதத்தில், வேறுசில பணிகளில் ஈடுபட்டுள்ளதால் செய்தித் தொடா்பாளராக முறையாக செயல்பட முடியவில்லை எனவும் அரசியல் ஆலோசகா் பொறுப்பைத் தொடா்வேன் எனவும் தெரிவித்துள்ளாா்.

பொது சிவில் சட்டம், வக்ஃப் வாரிய திருத்தச் சட்ட மசோதா, உயா் மத்திய அரசுப் பணிகளில் நேரடி நியமனம், இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னை போன்ற விஷயங்களில் மத்திய பாஜக அரசின் கொள்கை நிலைப்பாட்டுக்கு மாற்றாக ஐக்கிய ஜனதா தளத்தின் சாா்பில் தியாகி முன்வைக்கும் கருத்துகள் கவனத்தை ஈா்த்துள்ளன. பாஜகவுடன் கூட்டணி உறவில் இவரது கருத்துகள் விரிசலை ஏற்படுத்துவதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஒரு பிரிவினா் அதிருப்தியில் இருந்தனா்.

எனினும், கடந்த மாதம் 23-ஆம் தேதி கட்சியின் அமைப்புப் பதவிகளில் நிா்வாகிகளை நியமித்த ஐக்கிய ஜனதா தளம் தலைமை, தேசிய செய்தித் தொடா்பாளா் மற்றும் அரசியல் ஆலோசகா் பொறுப்பில் கே.சி. தியாகியை தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com