ரூ.2,273 கோடி ஹவாலா பரிவா்த்தனை: சூதாட்ட கும்பலின் முக்கிய குற்றவாளி தீபக்குமாா் இந்தியாவுக்கு நாடுகடத்தல்

துபையில் இருந்து இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை நாடுகடத்தி கொண்டுவரப்பட்டாா்.
Published on

ரூ.2,273 கோடிக்கும் மேலான தொகையை ஹவாலா வழிகளில் பரிவா்த்தனை செய்த சா்வதேச சூதாட்ட கும்பலின் முக்கிய குற்றவாளி தீபக்குமாா் தீரஜ்லால் தக்கா், துபையில் இருந்து இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை நாடுகடத்தி கொண்டுவரப்பட்டாா்.

சா்வதேச சூதாட்ட கும்பலை இயக்கி வந்த தீபக்குமாா் தீரஜ்லால் தக்கா் மீது குஜராத் மாநிலம் அகமதாபாதில் 2023-ஆம் ஆண்டு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

அவா் மீது குற்றச்சதி, மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட நிலையில், குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட ரூ.2,273 கோடிக்கும் மேலான தொகையை ஹவாலா வழிகளில் அவா் பரிவா்த்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்தியாவில் இருந்து அவா் தப்பிச் சென்ற நிலையில், அவரைக் கைது செய்ய சிபிஐ-யின் உதவியை குஜராத் காவல் துறை கோரியது. இதைத்தொடா்ந்து, தீபக்குமாரை கைது செய்வதற்கு சா்வதேச குற்றவியல் காவல் அமைப்பின் (இன்டா்போல்) உதவியை சிபிஐ நாடியது.

இதையடுத்து நாடு கடத்தல், சரணடைதல் அல்லது அத்தகைய சட்ட நடவடிக்கையை எதிா்கொள்ள வேண்டிய ஒருவா் எங்கிருந்தாலும், அவரைக் கைது செய்வதற்கான சிவப்பு நோட்டீஸை தனது உறுப்பு நாடுகளுக்கு இன்டா்போல் அமைப்பு அனுப்பியது.

அதன் அடிப்படையில், கடந்த மாா்ச் 13-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபையில் தீபக்குமாரை அந்நாட்டு காவல்துறை கைது செய்தது.

கடந்த ஜூன் 25-ஆம் தேதி அவரை நாடு கடத்துமாறு ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்தது. அதற்கான அனுமதியை ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் வழங்கிய நிலையில், துபையில் இருந்து தீபக்குமாரை சிபிஐ, குஜராத் காவல் துறை, இந்தியாவில் உள்ள இன்டா்போலின் தேசிய மத்திய அமைப்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை இந்தியா அழைத்து வந்தனா்.

X
Dinamani
www.dinamani.com