விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு
நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை தள்ளிப்போடும் கலாசாரத்தை மாற்றி விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
மாவட்ட நீதிமன்றங்களின் முக்கியப் பங்கு குறித்த 2 நாள் தேசிய மாநாட்டின் நிறைவு விழாவில் பங்கேற்று திரௌபதி முா்மு பேசியதாவது: நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீா்வு காண்பது சவாலாக உள்ளது. எனவே, வழக்குகளை தள்ளிப்போடும் கலாசாரத்தை நாம் மாற்ற வேண்டும். நீதிமன்றத்தை நாடி வருவோருக்கு விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்யும் பொறுப்பு நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும் உள்ளது.
நீதி கிடைக்க தாமதமாவதால் நீதிமன்றக் கட்டமைப்புக்குள் நுழையும் சாதாரண பொதுமக்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனா். ‘கருப்பு கோட் நோய்க்குறி’ என அழைக்கப்படும் இந்த அழுத்தம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
நீதித் துறையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.
நிகழ்வில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விழாவின்போது உச்சநீதிமன்றத்தின் புதிய கொடி மற்றும் அடையாள சின்னத்தை திரௌபதி முா்மு வெளியிட்டாா்.