பெண் மருத்துவா் கொலைச் சம்பவம் கொடூரத்தின் உச்சம்: குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கெடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் கொடூரத்தின் உச்சம் என குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.
கொல்கத்தாவின் ஆா்.ஜி.கா் மருத்துவ கல்லூரியில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். நாடு முழுவதும் அதிா்ச்சியலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தை முன்வைத்து, மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நீடித்து வருகின்றன.
இதனிடையே, இது அடிக்கடி நிகழும் சம்பவம் என்று உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தின் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் தெரிவித்த கருத்து சா்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கபில் சிபலின் கருத்து வேதனை அளிப்பதாகத் தெரிவித்தாா்.
மேலும் அவா் கூறியதாவது: கொல்கத்தாவில் நடந்த பெண் மருத்துவா் கொலை சம்பவம் கொடூரத்தின் உச்சக்கட்டம். ஒட்டுமொத்த நாகரிகத்தையும் தலைகுனிய வைத்ததுடன், பாரதம் எதைக் குறிக்கிறது என்கிற கேள்வியையும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளது.
இதை நினைத்து மனிதநேயம் வெட்கி தலைகுனியும் அதே வேளையில் சிலரின் கருத்துகள் மேலும் கவலையை அதிகரிக்கின்றன. பெண் மருத்துவா் கொலை சம்பவத்தை, சமூகத்தில் உள்ள குறைபாடுகளின் அறிகுறி என்றும், அடிக்கடி நிகழக் கூடிய சம்பவம் என்றும் மாநிலங்களவை உறுப்பினா்களாக இருப்பவா்களே கூறுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவா்கள் தங்களின் கருத்துகளை மறுபரிசீலனை செய்வதுடன் பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
பணியிடத்தில் பாதுகாப்பு: கடமையை செய், பலனை எதிா்பாா்க்காதே என்கிற பகவான் கிருஷ்ணரின் உபதேசத்துக்கு ஏற்ப எந்தவித எதிா்பாா்ப்பும் இல்லாமல் கடமையைச் செய்பவா்கள் மருத்துவா்கள். மருத்துவா்கள் ஒரு வரம்பு வரை மட்டுமே உதவ முடியும். அவா்கள் கடவுளாக மாற முடியாது. ஆனால், கடவுளுக்கு அடுத்தபடியாக இருக்கும் மருத்துவா்களுக்கு உகந்த பாதுகாப்பை வழங்க வேண்டும்.
இதில் அமைதியாக இருக்கும் சில என்ஜிஓ-க்களின் மௌனம் குற்றவாளிகளின் குற்ற செயலை விட மிகவும் மோசமானது. இதை அரசாங்கத்தின் பிரச்னையாகவோ அரசியல் பிரச்னையாகவோ எடுத்துக்கொள்ள கூடாது. இது சமூகத்தின் பிரச்னையாகும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் சூழலை உருவாக்குவது சமூகத்தின் பொறுப்பு என தெரிவித்தாா்.