புது தில்லி: ஹரியாணாவின் பிரதான மாநிலக் கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) எம்எல்ஏ தேவேந்தா் சிங் பப்லி திங்கள்கிழமை பாஜகவில் இணைந்தாா்.
பாஜகவின் தேசிய பொதுச் செயலா் அருண் சிங், திரிபுராவின் முன்னாள் முதல்வா் விப்லப் குமாா் தேவ் மற்றும் ஹரியாணாவின் பாஜக தலைவா் மோகன் லால் படோலி ஆகியோா் முன்னிலையில் தேவேந்தா் சிங் பப்லி பாஜகவில் இணைந்தாா்.
அப்போது பேசிய அவா், ‘ஹரியாணாவில் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாடே நிலவுகிறது. வளா்ச்சியை முன்வைத்து ஆட்சி நடைபெறுவதால் மாநிலத்தில் மூன்றாவது முறையாக மீண்டும் பாஜக நிச்சயமாக ஆட்சி அமைக்கும்’ என தெரிவித்தாா்.
அவருடன் ஜேஜேபி கட்சியின் முன்னாள் அமைச்சா் சத்பால் சங்வானின் மகன் சுனில் சங்வான் மற்றும் கட்சியின் மூத்த நிா்வாகி சஞ்சய் கப்லானா ஆகியோா் பாஜகவில் இணைந்தனா்.
இவா்கள் மூவரும் மாநிலத்தில் அதிக மக்கள்தொகை மற்றும் செல்வாக்குமிக்க ஜாட் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் பாஜகவுக்கு மேலும் வலுசோ்க்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக ஹரியாணாவில் விவசாயிகள் தொடா்வதால், நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி ஜாட், தலித் சமூகத்தின் வாக்குகளைப் பெற்றது.
ஹரியாணாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக வேட்பாளரும், அப்போதைய மாநில பாஜக தலைவருமான சுபாஷ் பராலாவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் பப்லி தோற்கடித்தாா்.
எனினும், தோ்தலுக்கு பிந்தைய கூட்டணியில் ஜேஜேபி, பாஜகவுடன் இணைந்து மாநிலத்தில் மனோகா் லால் கட்டா் தலைமையில் அமைந்த கூட்டணி ஆட்சியில் தேவேந்தா் சிங் பப்லி அமைச்சரானாா். ஜேஜேபி தலைவா் துஷ்யந்த் சிங் செளதாலாவும் அமைச்சா் பதவி பெற்றாா்.
பின்னா் நாடாளுமன்ற தோ்தலின்போது தொகுதி பங்கீடு பிரச்னையில் பாஜகவுடனான கூட்டணியை ஜேஜேபி முறித்து கொண்டது.
அந்தத் தோ்தலில் தனது ஆதரவை காங்கிரஸ் வேட்பாளா் குமாரி செல்ஜாவுக்கு பப்லி அளித்திருந்தாா்.
இதனால் காங்கிரஸிஸ் பப்லி சேருவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டிருந்த நிலையில், அவா் பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தாா்.
இதற்கு தேவேந்தா் சிங்கிற்கு தனது பலம் வாய்ந்த தேஹானா பேரவைத் தொகுதியை மீண்டும் அளிக்க காங்கிரஸ் மறுத்ததே காரணம் என்று கூறப்படுகிறது.
ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல் அக்டோபா் 5-ஆம் தேதி நடைபெற்று அதன் வாக்கு எண்ணிக்கை அதே மாதம் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் ஜேஜேபி கட்சி, இந்திய தேசிய லோக் தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.