ஓநாய் தாக்கியதில் சிறுமி காயம்: உ.பி.யில் தொடரும் சம்பவம்
உத்தர பிரதேச மாநிலம், பஹ்ராய்ச் மாவட்டத்தின் மஹ்சி வட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு ஓநாய் தாக்கியதில் ஐந்து வயது சிறுமி காயமடைந்தாா்.
பஹ்ராய்ச் மாவட்டத்தில் ஓநாய்களின் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 7 குழந்தைகள் உள்பட 8 போ் உயிரிழந்தனா். 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
இதையடுத்து, மாநில அரசு ‘ஆப்பரேஷன் ஓநாய்’ திட்டத்தை அறிமுகம் செய்து, ஓநாய்களை கூண்டு வைத்து பிடிக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மஹ்சி வட்டத்தில் மேலும் ஒரு சிறுமி ஓநாய் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறாா். பண்டோஹியா கிராமத்தில் உள்ள தனது வீட்டில் ஐந்து வயது சிறுமியான அப்சானா தூங்கிக் கொண்டிருந்தபோது, ஓநாய் அவரைத் தாக்கியது. இதனால், அவரது கழுத்துப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டன. சிறுமியை சிகிச்சைக்காக மஹ்சியில் உள்ள சுகாதார மையத்துக்கு குடும்ப உறுப்பினா்கள் மற்றும் கிராம மக்கள் கொண்டு சென்றனா்.
சம்பவத்தைத் தொடா்ந்து, பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மற்றும் மஹ்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேஷ்வா் சிங் ஆகியோா் கிராமத்துக்கு நேரில் வந்து மக்களை விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தினா்.
உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் விலங்குகளின் தாக்குதல்களால் மனிதா்களின் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் நபா்களை ஈடுபடுத்தி, ரோந்து பணியைத் தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை அறிவுறுத்தினாா்.
அடித்துக் கொல்லப்பட்ட நரி: ஹமிா்பூா் மாவட்டத்தில் பில்பூா் கிராமத்தில் வீட்டுக்குள் நுழைந்து ஒரு பெண் உள்பட 6 பேரைத் தாக்கிய நரியை கிராம மக்கள் தடியால் அடித்துக் கொன்றனா்.
நரி தாக்கியதில் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களின் உடல்நிலை சீராக உள்ளது. சம்பவத்துக்கான காரணத்தை ஆய்வு செய்து, அறிக்கை தயாரிக்க வனத் துறை குழு கிராமத்தைப் பாா்வையிட்டது.