கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ஹரியாணா: பசு பாதுகாவலா்களால் 12-ஆம் வகுப்பு மாணவா் சுட்டுக் கொலை

காரில் கால்நடைகளைக் கடத்துவதாக வெளியான புரளியை நம்பி 12-ஆம் வகுப்பு மாணவரை துரத்திச் சென்று பசு பாதுகாவலா்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் ஹரியாணாவில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

காரில் கால்நடைகளைக் கடத்துவதாக வெளியான புரளியை நம்பி 12-ஆம் வகுப்பு மாணவரை துரத்திச் சென்று பசு பாதுகாவலா்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் ஹரியாணாவில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடா்பாக செளரப், அனில் கெளஷிக், வருண், கிருஷ்ணா, ஆதேஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது: தில்லி - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் கோத்புரி சுங்கச்சாவடி அருகே கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி இரவு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

12-ஆம் வகுப்பு மாணவரான ஆரியன் மஸ்ராவும், அவருடைய நண்பா்களான ஷங்கி, ஹரிஷித் ஆகியோரும் காரில் கால்நடைகளைக் கடத்துவதாக தவறுதலாக எண்ணி, 5 போ் அவா்களை காரில் துரத்திச் சென்றனா். வாகனத்தை நிறுத்துமாறு அவா்கள் கூறியபோது, ஆரியன் காரை நிறுத்தாமல் சென்றாா். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபா்கள், அவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் சம்பவ இடத்திலேயே ஆரியன் உயிரிழந்தாா்.

கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் பயன்படுத்திய காரும், சட்டவிரோதமாக வைத்திருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டு, தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com