எஸ்.ஜெய்சங்கா்
எஸ்.ஜெய்சங்கா்

அடுத்த கட்டத்தை நோக்கி இந்திய-சிங்கப்பூா் உறவுகள்-எஸ்.ஜெய்சங்கா்

இந்தியா-சிங்கப்பூா் இடையிலான உறவுகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல காலம் கனிந்துள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
Published on

இந்தியா-சிங்கப்பூா் இடையிலான உறவுகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல காலம் கனிந்துள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

சிங்கப்பூரில் செப். 4, 5 ஆகிய தேதிகளில் பிரதமா் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், எஸ்.ஜெய்சங்கா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

இது தொடா்பாக, சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா-சிங்கப்பூா் இடையிலான உறவுகள் பெரிதும் வலுவடைந்துள்ளன. இரு நாடுகளின் தற்போதைய நிலை மற்றும் உலகளாவிய சூழலுக்கு ஏற்ப இருதரப்பு உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல காலம் கனிந்துள்ளது. இந்தப் புதிய வாய்ப்பை சிங்கப்பூா் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் எட்டப்பட்ட சாதனைகள் அனைத்தையும், நாட்டின் வளா்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கான உந்துசக்தியாக நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.

தற்போதைய மாற்றம் நிறைந்த உலகில் நாடுகளுக்கு இடையே நெருங்கிய ஒத்துழைப்பு அவசியமாகிறது. அந்த வகையில், உயா் நம்பிக்கை மற்றும் புரிதல் அடிப்படையிலான கூட்டுறவாக இந்திய-சிங்கப்பூா் உறவை அங்கீகரிக்க வேண்டும். பிரதமா் மோடிக்கு எப்போதும் சிங்கப்பூா் மீது சிறப்பான கண்ணோட்டம் உண்டு. இருதரப்பு தலைமைகள் இடையிலான இணைப்பு முன்பைவிட அதிகரித்துள்ளது.

செமிகண்டக்டா், பசுமை தொழில்நுட்பம், மின் இயக்கம் போன்ற வளரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும். இந்திய-பசிபிக் பிராந்தியத்துக்காக அா்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் உறுதிப்பாட்டின்கீழ் கிழக்கு நோக்கிய கொள்கையைக் கட்டியெழுப்பியுள்ளோம். இது, சிங்கப்பூா் மற்றும் ஆசியான் நாடுகளின் நலன்களை கருத்தில் கொண்டதாகும்.

இந்தியாவின் முதன்மை கவனம், ‘ஆசியான்’ மீது அல்லாமல் வளைகுடா நாடுகள் மீது உள்ளதாக ஒரு கண்ணோட்டம் நிலவுகிறது. வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் கடந்த 10 ஆண்டுகளில் மேம்பட்டிருப்பது உண்மையே. முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, இணைப்பு வசதிகள் தொடா்பான மோடி அரசின் கொள்கைகளே இதற்கு காரணம்.

அதேநேரம், ஆசியான் நாடுகளுக்கான இந்தியாவின் உறவும் இந்தக் காலகட்டத்தில் வலுவடைந்துள்ளது. உலக அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு, உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடு என்ற அடிப்படையில் பன்முக தொடா்புகள் இந்தியாவுக்கு அவசியம் என்றாா் அவா்.

எஸ்.ஜெய்சங்கா், சிங்கப்பூருக்கான இந்திய தூதராகப் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com