நமது சிறப்பு நிருபர்
"அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்று நடுவோம்' என்கிற பிரசாரத்தின்கீழ் நாட்டில் 52 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மரம் வளர்க்கும் ஆர்வத்தில் இது ஒரு மைல்கல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப்பதிவில் குறிப்பிடுகையில், "சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கடந்த ஜூன் 5-ஆம் தேதி தில்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் அரச மரக்கன்றை நட்டு நமது புவியின் நலனுக்காக அனைவரும் பங்களிக்க வேண்டும்' என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது அவர், தாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில் எதிர்காலங்களில் மரக்கன்றை நடுமாறு அவர் கேட்டுக்கொண்டார். இத்தகவல் எக்ஸ் வலைத்தளத்திலும் இது பகிரப்பட்டது.
பிரதமரின் இந்தப் பிரசாரத்தின் தெளிவான அழைப்பின் மூலம் சிறந்த பூமி, நிலையான வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் பங்களித்து நாடு முழுவதும் 52 கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன' என்று அமைச்சர்பூபேந்தர் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.