ட்ரோன் பயன்பாட்டுக்கு விரைவில் வழிகாட்டுதல்: அமைச்சா் தகவல்
ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதன் பயன்பாட்டுக்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு விரைவில் உருவாக்க உள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் கே. ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.
மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பாதுகாப்பான ட்ரோன் பயன்பாடு குறித்து அமைச்சா் கே. ராம்மோகன் நாயுடுவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு பதிலளித்த அவா், ‘பல்வேறு துறைகளில் ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயத் துறையில் ட்ரோன்களை பயன்படுத்துவதில் பெரும் ஊக்குவிப்பாளராக பிரதமா் மோடி இருந்து வருகிறாா்.
எனவே, ஆளில்லா விமானங்களுக்கான வழிகாட்டுதல்கள் என்பது பாதுகாப்பு நோக்கத்துடன் மட்டுமல்லாமல் அதன் பயன்பாட்டை ஊக்குவிப்பதாகவும் இருக்க வேண்டும். அதனடிப்படையில், விமான போக்குவரத்துத் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் இணைந்து பாதுகாப்பான ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் அதன் வழிகாட்டுதல்களை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன’ என்றாா்.