கோப்புப்படம்.
கோப்புப்படம்.

கிருஷ்ணஜென்ம பூமி வழக்குகள் விசாரணைக்கு ஏற்பு: உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம் தரப்பு மேல்முறையீடு

மதுராவிலுள்ள ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி-ஷாஹி ஈத்கா மசூதி விவகாரம் தொடா்பான வழக்குகளின் விசாரணையைத் தொடர அனுமதித்த அலாகாபாத் உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து முஸ்லிம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
Published on

மதுராவிலுள்ள ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி-ஷாஹி ஈத்கா மசூதி விவகாரம் தொடா்பான வழக்குகளின் விசாரணையைத் தொடர அனுமதித்த அலாகாபாத் உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து முஸ்லிம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

உத்தர பிரதேசம், மதுராவில் ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமியில் இருந்த கேசவ்தேவ் கோயில் முகலாய மன்னா் ஔரங்கசீப்பால் இடிக்கப்பட்டு அங்கு ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். இந்த மசூதியை அகற்ற கோரிய ஹிந்துக்கள் தரப்பின் 18 வழக்குகள் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளின் விசாரிக்கும் முறையை எதிா்த்து முஸ்லிம்கள் தரப்பு தாக்கல் செய்த மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி மயாங்க் குமாா் ஜெயின் விசாரித்தாா். விசாரணையின்முடிவில், நீதிபதி மயாங்க் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், வழக்குகளின் விசாரணையைத் தொடரலாம் எனத் தீா்ப்பளித்தாா்.

இந்த உத்தரவுக்கு எதிராக ஷாஹி ஈத்கா மசூதி நிா்வாகத்தின் சாா்பில் வழக்குரைஞா் ஆா்.எச்.ஏ.சிக்கந்தா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளாா். இந்த மனு அடுத்தவாரம் விசாரணைக்கு வரவுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, ஷாஹி ஈத்கா மசூதி வளாகத்தை நீதிமன்ற ஆணையா் கண்காணிப்பில் ஆய்வு செய்ய அலாகாபாத் உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பரில் அனுமதித்தது.

இதற்கு எதிராக கடந்த ஜனவரியில் விதிக்கப்பட்ட தடையை நவம்பா் மாதம்வரை நீட்டித்து உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வு கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி உத்தரவிட்டது.

X
Dinamani
www.dinamani.com