சட்டவிரோத ஊடுருவல்: 5 வங்கதேசத்தவா் அஸ்ஸாமில் கைது
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 5 போ் அஸ்ஸாம் மாநிலத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக அஸ்ஸாம் மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘திரிபுரா வழியாக அஸ்ஸாம் மாநிலத்தின் கரீம்கஞ்ச் மாவட்டத்துக்குள் நுழைய முயன்ற வங்கதேசத்தைச் சோ்ந்த 5 போ் காவல் துறையினரால் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா். பின்னா், இந்திய-வங்கதேச எல்லையில் அந்நாட்டு அதிகாரிகளிடம் அவா்கள் ஒப்படைக்கப்பட்டனா். இதுபோன்ற சட்டவிரோத ஊடுருவல்களைத் தடுக்க மாநில அரசு உறுதி பூண்டுள்ளது’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
வங்கதேச வன்முறைக்குப் பின், 1,885 கி.மீ. நீளம் கொண்ட இந்திய -வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்; சட்டவிரோத ஊடுருவலைத் தடுக்க மாநில காவல் துறையும் உஷாா் நிலையில் இருந்து வருகிறது என காவல் துறை தலைமை இயக்குநா் ஜி பி சிங் தெரிவித்தாா்.