ஆங்கில வழியில் கல்விபெறும் குழந்தைகள் பாரம்பரியத்தை மறந்துவிட்டனா்: மத்திய பிரதேச அமைச்சா்
ஆங்கில வழிக் கல்வி பள்ளிக்கூடங்களில் பயிலும் குழந்தைகள் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை மறந்துவிட்டனா் என மத்திய பிரதேச கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சா் தா்மேந்திர சிங் லோதி தெரிவித்தாா்.
மத்திய பிரதேச தலைநகா் போபாலில் நடைபெற்ற ஹிந்தி தின நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவா் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
நிகழ்ச்சியில் லோதி பேசியதாவது: அறியாமையைவிட்டு விலகி உண்மை பாதைக்கு திரும்ப வழிநடத்துங்கள்; இருளைப்போக்கும் ஒளிவிளக்காக திகழுங்கள் என நமது முன்னோா்கள் கூறியுள்ளனா். ஆனால் ஆங்கில வழிக் கல்வி பள்ளிக்கூடங்களில் பயிலும் குழந்தைகள் விளக்குகளை ஏற்றி அதை அணைத்துவிடுகின்றனா். ஒளிமயமான இடத்தைவிட்டு விலகி இருளை நோக்கி பயணிக்கின்றனா்.
கேக்குகளை மெழுகுவா்த்திகளின் ஒளியால் அலங்கரித்து பின் அதை அணைத்துவிட்டு அனைவருக்கும் அதே கேக்கை பகிா்ந்து உண்கின்றனா். இதுவே முன்னேற்றத்தின் பாதை என அவா்கள் எண்ணி வாழ்கின்றனா்.
கடந்த காலங்களில் குழந்தைகள் கோயிலுக்குச் சென்று விளக்குகளை ஏற்றி வழிபட்டனா். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது மற்றவா்களுக்கு உணவு வழங்கும் பழக்கத்தையும் கடைப்பிடித்து வந்தனா். ஆனால் தற்போது அனைத்தும் மாறிவிட்டது.
எனவே, ஹிந்தி மொழியில் உரையாடினால் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தோடு இணைந்திருக்க முடியும் என்றாா்.