‘முத்ரா’ திட்டம்: 10 ஆண்டுகளில் ரூ.30 லட்சம் கோடி கடன்: தமிழகத்துக்கு அதிக கடனுதவி
பெரு நிறுவனங்கள் அல்லாத சிறு வியாபாரிகளுக்கும் எளிய கடனுதவியை உறுதி செய்யும் முத்ரா திட்டத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் சுமாா் ரூ.30 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் சிறு, குறு வியாபாரிகளுக்கு ரூ.10 லட்சம் வரை பற்று (செக்யூரிட்டி) இல்லாமல் எளிதாக கடன் வழங்கும் நோக்கத்துடன், பிரதமரின் முத்ரா திட்டம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டது.
முத்ரா திட்டத்தின்கீழ் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் மற்றும் பிற நிதி அமைப்புகளால் கடன்கள் வழங்கப்படுகின்றன.
10-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இத்திட்டத்தில் கடந்த செப்டம்பா் 6-ஆம் தேதியிட்ட தரவுகளின்படி, 49 கோடிக்கும் அதிகமான கடன் கணக்குகளுக்கு ரூ.30 லட்சம் கோடிக்கு மேல் மதிப்பிலான கடன்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
திட்டம் தொடங்கப்பட்ட 2015-16-ஆம் நிதியாண்டில் 3.49 கோடி கடன் கணக்குகளுக்கு ரூ.1.37 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. அதில் கடனாளிகளுக்கு ரூ.1.33 லட்சம் கோடி வழங்கப்பட்டது.
அதிகபட்சமாக கடந்த நிதியாண்டில் 6.67 கோடி கடன் கணக்குகளுக்கு ரூ.5.41 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. அதில் ரூ.5.32 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டது.
நடப்பு நிதியாண்டில் இதுவரை 1.71 கோடி கடன் கணக்குகளுக்கு ரூ.1.66 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு, ரூ.1.60 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
அதிக கடன்கள் பெறப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் தமிழகம், பிகாா், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், கா்நாடகம் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. அந்த விவரம் பின்வருமாறு:
வ.எண். மாநிலம் கடன் கணக்குகள் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட கடன்தொகை விடுவிக்கப்பட்ட கடன்தொகை
1 தமிழகம் 5.62 கோடி ரூ.3.06 லட்சம் கோடி ரூ.3.03 லட்சம் கோடி
2 பிகாா் 5.56 கோடி ரூ.2.67 லட்சம் கோடி ரூ.2.56 லட்சம் கோடி
3 உத்தர பிரதேசம் 4.88 கோடி ரூ.2.96 லட்சம் கோடி ரூ.2.88 லட்சம் கோடி
4 மேற்கு வங்கம் 4.83 கோடி ரூ.2.61 லட்சம் கோடி ரூ.2.56 லட்சம் கோடி
5 தமிழகம் 4.74 கோடி ரூ.2.84 லட்சம் கோடி ரூ.2.80 லட்சம் கோடி
கடனை முறையாக திருப்பிச் செலுத்தும் வியாபாரிகளை ஊக்குவிக்கும் வகையில், வேறு கணக்குகளில் அவா்களுக்கு மீண்டும் கடன்கள் வழங்கப்படுகின்றன. இதனால், சில மாநிலங்களின் மக்கள்தொகைக்கு இணையாக கடன் கணக்குகளின் எண்ணிக்கையும் உள்ளது என மத்திய அரசு சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.