உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள பட்டாசு குடோன் மற்றும் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
ஷிகோஹாபாத் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நௌஷேரா பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் திங்கள்கிழமை இரவு இந்த வெடிப்பு விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு மற்றம் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் குழு நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டாசு குடோனில் திடீரென வெடித்ததால், கட்டடத்தின் சுவர்கள் இடிந்து அதில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தனர்.
மாவட்ட மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இறந்தவர்கள் மீராதேவி (45), அமன் (20), கௌதம் குஷ்வாஹா (18), குமாரி இச்சா (3) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்த குழந்தைகளில் ஒருவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஃபிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள ஷிகோஹாபாத் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் நடந்த விபத்து குறித்து உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதுடன், சம்பவ இடத்துக்குச் சென்று நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.