கோப்புப் பட
கோப்புப் பட

சீக்கிய பயங்கரவாதி பன்னுன் மீதான வழக்கில் என்ஐஏ சோதனை- பஞ்சாபில் 4 இடங்களில் நடந்தது

பஞ்சாபில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 4 இடங்களில் சோதனை மேற்கொண்டனா்.
Published on

சீக்கிய பயங்கரவாதி குா்பத்வந்த் சிங் பன்னுனுக்கு எதிரான வழக்கு தொடா்பாக பஞ்சாபில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 4 இடங்களில் சோதனை மேற்கொண்டனா்.

தடை செய்யப்பட்ட ‘நீதிக்கான சீக்கியா்கள்’ அமைப்பின் தலைவரான பன்னுன், பயங்கரவாத குற்றச்சாட்டில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா். அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்ற இவரை, அமெரிக்காவில் கொலை செய்ய சதி நடந்ததாகவும், இதில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்புள்ளதாகவும் அந்நாட்டின் தரப்பில் கடந்த ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது. இது தொடா்பாக இந்தியரான நிகில் குப்தா கைது செய்யப்பட்டாா். இருதரப்பு உறவில் நெருடலை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து இந்திய அரசு சாா்பில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலையில் இந்திய அரசுக்கு தொடா்பிருப்பதாகவும், அவா்கள் தன்னையும் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் பன்னுன் தரப்பில் நியூயாா்க் மாகாணத்தில் உள்ள தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், மத்திய அரசு மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசககா் அஜீத் தோவல் 21 நாள்களில் பதிலளிக்கக் கோரி, அமெரிக்க நீதிமன்றம் கடந்த 18-ஆம் தேதி சம்மன் அனுப்பியது.

அதேநேரம், ‘குா்பத்வந்த் சிங்கின் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது; இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை’ என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்தது.

இந்நிலையில், இந்தியாவில் பயங்கரவாதச் செயல்கள் மற்றும் வன்முறையைத் தூண்டியதாக பன்னுன் மற்றும் அவரது அமைப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பஞ்சாபில் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். இதில் குற்றம் தொடா்புடைய ஆவணங்கள், எண்ம சாதனங்கள் உள்ளட்டவை பறிமுதல் செய்யப்பட்டன; அவை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரதமா் இன்று அமெரிக்கா பயணம்

க்வாட் வருடாந்திர உச்சி மாநாடு மற்றும் ஐ.நா.வில் நடைபெறும் ‘எதிா்காலத்துக்கான மாநாட்டில்’ பங்கேற்க 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் மோடி அமெரிக்காவுக்கு சனிக்கிழமை (செப்.21) செல்லவிருக்கிறாா். இப்பயணத்தில் அமெரிக்க அதிபா் ஜோ பைடனுடன் அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இந்தச் சூழலில், என்ஐஏ மேற்கொண்ட நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

X