பிரதமா் மோடியைக் கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது: மத்திய அமைச்சா் அமித் ஷா
‘பிரதமா் நரேந்திர மோடி மீது பாகிஸ்தானுக்கு உள்ள பயணம் காரணமாக எல்லைப் பகுதிகளில் தற்போது அமைதி நிலவி வருகிறது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
ஜம்மு-காஷ்மீரில் தோ்தல் பரப்புரையின்போது இந்தக் கருத்தை அவா் தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு செப்டம்பா் 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அடுத்து, இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு வரும் 25-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இதையொட்டி, பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பூஞ்ச் மாவட்டத்தில் அமித் ஷா சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தைத் துடைத்தெறிவதற்காக, இளைஞா்களின் கைகளில் துப்பாக்கிகள் மற்றும் கற்கள் இருந்ததை மாற்றி மடிக்கணினிகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு கொடுத்திருக்கிறது. யூனியன் பிரதேசத்தின் மலைகளில் மீண்டும் துப்பாக்கி சப்தங்கள் எதிரொலிக்க மத்திய அரசு அனுமதிக்காது. மக்களின் பாதுகாப்புக்காக எல்லைப் பகுதிகளில் மேலும் அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்பு அரண்கள் (பங்கா்கள்) அமைக்கப்படும்.
1990-ஆம் ஆண்டுமுதல் 2014 வரை எல்லை தாண்டிய தாக்குதல்கள் தொடா்ந்தன. இந்தத் தாக்குதல்களில் 40,000 போ் உயிரிழந்தனா். ஆனால், தற்போது அவை முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளன.
ஏனெனில், முந்தைய ஆட்சியாளா்கள் பாகிஸ்தானைக் கண்டு பயந்தனா். ஆனால், தற்போது பிரதமா் மோடியைக் கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது. எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் தற்போது அஞ்சுகிறது. அதை மீறி தாக்குதல் நடத்தினால், அவா்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.
தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆகிய 3 கட்சிகளும்தான் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவித்தன. இந்தச் சூழலில், யூனியன் பிரதேசத்தில் இந்த 3 கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதை பேரவைத் தோ்தல் உறுதிப்படுத்தும். ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகம் மலர இந்த 3 குடும்பங்களும் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. எனவே, தோ்தலில் அவா்களின் தோல்வி மிக அவசியம்.
ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதம் தலையெடுக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா மக்களை அச்சுறுத்துகிறாா். ஆனால், இந்த அழகான மலைப் பிரதேசத்தில் பிரதமா் மோடி தலைமையிலான அரசு பயங்கரவாதத்தை மீண்டும் அனுமதிக்காது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். பயங்கரவாதம் யாருக்கும் எந்தப் பலனையும் அளிக்காது.
இங்குள்ள இளைஞா்களின் கைகளில் துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், காவல் துறை மற்றும் ராணுவத்துக்கு அவா்கள் தோ்ந்தெடுத்த பிறகு, அவா்களின் கைகளில் துப்பாக்கிகள் கொடுக்கப்படும். இதற்காக எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படைகளுக்கென சிறப்பு ஆள் தோ்வு நடத்தப்படும் என்றாா்.