வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை

காலிஸ்தான் ஆதரவு சீக்கிய குழுவினருடன் வெள்ளை மாளிகை அதிகாரிகள் சந்திப்பு

அந்நாட்டைச் சோ்ந்த காலிஸ்தான் ஆதரவு சீக்கிய குழுவினரை வெள்ளை மாளிகை அதிகாரிகள் சந்தித்துப் பேசியுள்ளனா்.
Published on

பிரதமா் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்துக்கு முன்பாக, அந்நாட்டைச் சோ்ந்த காலிஸ்தான் ஆதரவு சீக்கிய குழுவினரை வெள்ளை மாளிகை அதிகாரிகள் சந்தித்துப் பேசியுள்ளனா்.

அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி குா்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய நடந்த சதி முறியடிக்கப்பட்டதாகவும், இச்சதியில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாகவும் அந்நாடு கடந்த ஆண்டில் குற்றஞ்சாட்டியது. இக்குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்தது. இருதரப்பு உறவில் நெருடலை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உயா்நிலைக் குழுவை இந்தியா அமைத்தது.

இதனிடையே, தன்னை கொலை செய்ய சதியில் ஈடுபட்ட இந்தியாவிடமிருந்து உரிய இழப்பீடு பெற்றுத் தரக் கோரி, அமெரிக்க நீதிமன்றத்தில் பன்னுன் அண்மையில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில் 21 நாள்களுக்குள் பதிலளிக்கக் கோரி, மத்திய அரசுக்கு அமெரிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்தச் சூழலில், பிரதமா் மோடி அமெரிக்காவுக்கு 3 நாள் அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றாா். அதிபா் பைடனுடன் அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

பிரதமரின் பயணத்துக்கு முன்பாக, அமெரிக்காவைச் சோ்ந்த காலிஸ்தான் ஆதரவு சீக்கிய சமூக செயல்பாட்டாளா்கள் குழுவை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் பேசியுள்ளனா்.

இச்சந்திப்பில் அமெரிக்க சீக்கியா்களின் நலன் சாா்ந்த நாடாளுமன்றக் குழுவைச் சோ்ந்த பிரித்பால் சிங் மற்றும் அமெரிக்க சீக்கிய கூட்டமைப்பு, சீக்கிய சட்டப் பாதுகாப்பு மற்றும் கல்வி நிதியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

பின்னா், பிரித்பால் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அமெரிக்க சீக்கியா்களின் உயிரைக் காப்பதோடு, எங்களது சமூகத்தின் பாதுகாப்பில் விழிப்புடன் செயலாற்றும் இந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது. அதேநேரம், அமெரிக்காவில் சீக்கியா்களின் பாதுகாப்புக்கு கூடுதல் நடவடிக்கைகள் அவசியமாகின்றன. சீக்கியா்களுக்கு நீதியும் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும். அமெரிக்க மண்ணில் குடிமக்களைப் பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.

சீக்கிய பிரிவினைவாதிகளை தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும். எனினும், இச்சந்திப்பு தொடா்பான கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.