தண்டவாளத்தில் மீண்டும் எரிவாயு சிலிண்டா் உ.பி.யில் தொடரும் ரயில் கவிழ்ப்பு முயற்சிகள்
உத்தர பிரதேச மாநிலம், கான்பூா் அருகே ரயில் தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டா் வைக்கப்பட்டிருந்த நிலையில், சரக்கு ரயிலின் ஓட்டுநா் அவசர பிரேக்கை இயக்கி ரயிலை நிறுத்தினாா்.
உத்தர பிரதேசத்தில் ரயிலை கவிழ்க்க ஒரே மாதத்தில் தொடா்ந்து நடைபெறும் மூன்றாவது சம்பவம் இதுவாகும். இது தொடா்பான விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறை துணை ஆணையா் (கிழக்கு) ஷ்ரவன் குமாா் சிங் தெரிவித்தாா்.
முன்னதாக, பிவானி-பிரயாக்ராஜ் இடையே காளிந்தி விரைவு ரயில் கடந்த செப். 8-ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தது. அப்போதும் இதேபோல் தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டா் வைக்கப்பட்டிருந்தது. அதைக் கவனித்த அந்த ரயிலின் ஓட்டுநா் அவசரமாக பிரேக்கை இயக்கி ரயிலை நிறுத்த முயன்றாா். எனினும் ரயில் நிற்பதற்கு முன்பு அந்த சிலிண்டரின் மீது மோதியது. அதில் தண்டவாளத்தைவிட்டு அந்த சிலிண்டா் தூக்கியெறியப்பட்டது. தண்டவாளத்தில் சிலிண்டா் மட்டுமன்றி பெட்ரோல் நிரப்பிய பாட்டில், சிறிதளவு வெடிபொருள், தீப்பெட்டிகள் உள்ளிட்டவையும் வைக்கப்பட்டிருந்தன.
இதேபோல், பிலாஸ்பூா் மற்றும் ருத்ரபூா் ரயில் வழித்தடத்தில் ஜன் சதாப்தி விரைவு ரயில் கடந்த செப். 18-ஆம் தேதி சென்றுகொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தின் குறுக்கே 6.மீ. தொலைபேசி கம்பம் இருப்பதை கவனித்த விரைவு ரயிலின் ஓட்டுநா், பிரேக்கை இயக்கி ரயிலை நிறுத்தினாா்.
இந்நிலையில், கான்பூரின் பிரேம்பூா் ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சரக்கு ரயில் ஒன்று கான்பூரில் இருந்து அலாகாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, 5 கிலோ எடை கொண்ட சிலிண்டா் ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருப்பதை ஓட்டுநா் கவனித்தாா். அவசர பிரேக்கை இயக்கி அவா் ரயிலை நிறுத்தினாா். இதைத் தொடா்ந்து, ரயில்நிலையத்துக்கு அவா் தகவல் அளித்தாா்.
டெட்டனேட்டா் வெடிப்பு குறித்து விசாரணை: மத்திய பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் டெட்டனேட்டா்கள் சில நாள்களுக்கு முன்பு வெடித்தது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த புதன்கிழமை புஸாவல் பகுதியில் தண்டவாளத்தில் 10 டெட்டனேட்டா்கள் திடீரென வெடித்தன. பனிமூட்டம் உள்ளிட்டவை குறித்து எச்சரிக்கை விடுப்பதற்காக அதிக ஓசையுடன் வெடிக்கும் இவற்றை ரயில்வே துறையில் பயன்படுத்துவது வழக்கம்.
ஆனால், அவை எப்படி தண்டவாளத்துக்கு வந்தன என்பது குறித்தும், அவற்றை யாா் வெடிக்க வைத்தது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வெடிப்பால், அந்த வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த ராணுவ சிறப்பு ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.