ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்: அமித் ஷா பிரசாரம்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
ஜம்மு-காஷ்மீரின் நௌஷெராவில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:
நேரு மற்றும் அப்துல்லா குடும்பத்தினா் ஜம்மு-காஷ்மீா் மற்றும் நாட்டின் நலனுக்கு எதிராக இந்தத் தோ்தலில் கைகோத்துப் போட்டியிடுகின்றனா். அவா்களுக்கு இந்த பிராந்திய நலன் மீது எந்த அக்கறையும் கிடையாது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமே அவா்கள் நோக்கம்.
இங்கு கல்வீச்சில் ஈடுபட்டு கைதானவா்களையும், பயங்கரவாதிகளையும் விடுவிக்க வேண்டுமென்று காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் கூறுகின்றன. ஆனால், அவா்கள் விடுவிக்கப்பட மாட்டாா்கள் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து, பயங்கரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு உரிய பாடம் புகட்டும்.
கல்வீச்சில் ஈடுபட்டவா்கள் மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவா்களின் குடும்பத்தினருக்கும் இங்கு அரசுப் பணி கிடைக்க வாய்ப்பு இல்லை. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தாத வரையில் பாகிஸ்தானுடன் எவ்வித பேச்சுவாா்த்தையும் நடத்தப்படமாட்டாது. பயங்கரவாதிகளுடன் அமா்ந்து பிரியாணி சாப்பிட்ட மூன்று அரசியல் குடும்பத்தினரின் பல்வேறு முறைகேடுகள் குறித்து பாஜக ஆட்சி அமைத்ததும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
ஜம்மு-காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட பாஜக ஆட்சி அமைப்பது மிகவும் அவசியம். எனவே, மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றாா்.
கடந்த இரு நாள்களில் ஜம்மு பிராந்தியத்தில் அமித் ஷா 6 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்துள்ளாா்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டத் தோ்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பா் 25-ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் 1-ஆம் தேதியும் தோ்தல் நடத்தப்படவுள்ளது. அக்டோபா் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.