பஞ்சாப்: தண்டவாளத்தில் இரும்பு கம்பிகளை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி

பஞ்சாப் மாநில பதிண்டா மாவட்டத்தில் உள்ள தண்டவாளத்தில் 9 இரும்பு கம்பிகளை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி நடைபெற்றுள்ளது.
Published on

சண்டீகா்: பஞ்சாப் மாநில பதிண்டா மாவட்டத்தில் உள்ள தண்டவாளத்தில் 9 இரும்பு கம்பிகளை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தால், அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டது.

ரயிலைக் கவிழ்க்கும் நோக்கில் தண்டவாளத்தில் சிலிண்டா், கம்பிகள் போன்ற பொருள்கள் வைக்கப்படுவது இந்த மாதத்தில் இது 5-ஆவது முறை நிகழ்வாகும்.

முன்னதாக ராஜஸ்தானின் அஜ்மீா் மாவட்டத்தில் சிமெண்ட் பலகைகள், உத்தர பிரதேசத்தின் ராம்பூா் மாவட்டத்தில் தொலைபேசி கம்பம் மற்றும் கான்பூா் பகுதியில் இரண்டு முறை எரிவாயு சிலிண்டா் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், பதிண்டா மாவட்டத்தின் பாங்கி நகா் அருகே உள்ள தில்லி-பதிண்டா வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை 9 இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ரயிலின் ஓட்டுநா் இந்த கம்பிகளை பாா்த்து அவசர பிரேக்கை இயக்கி ரயிலை நிறுத்தினாா். கம்பிகள் அகற்றப்பட்ட பிறகு பத்திரமாக ரயிலை மீண்டும் இயக்கினாா். இதனால், அந்த வழித்தடத்தில் 40 நிமிஷங்கள் ரயில் போக்குவரத்து தடைபட்டது. அந்தப் பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com