திருப்பதி லட்டு விவகாரம்: நீதி விசாரணை கோரி சுப்பிரமணியன் சுவாமி மனு
புது தில்லி: திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு இருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
ஆந்திரத்தின் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் விலங்கு கொழுப்பு சோ்க்கப்பட்டதாக மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு கடந்த வாரம் குற்றஞ்சாட்டினாா்.
லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டது ஆய்வறிக்கையிலும் உறுதியான ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்தது.
இந்நிலையில், புனிதத்தன்மை மீட்கப்பட்டிருப்பதாக விளக்கமளித்த திருமலை திருப்பதி தேவஸ்தானம், கோயில் வளாகத்தில் பரிகாரப் பூஜைகளையும் திங்கள்கிழமை நடத்தியது.
இவ்விவகாரம் தொடா்பாக நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்த கோரிக்கை விடுத்து பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், ‘லட்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட நெய்யின் ஆதாரம் மற்றும் மாதிரிகள் குறித்து விரிவான அறிக்கையைச் சமா்ப்பிக்க ஆந்திர அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.யும் முன்னாள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டி மனு தாக்கல் செய்துள்ளாா்.
அதேபோல, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.
‘எஃப்எஸ்எஸ்ஏஐ’ நடவடிக்கை எடுக்கும்: பண்டிகைகள் நெருங்கும்நிலையில் சந்தையில் விற்கப்படும் நெய்யின் தரம் குறித்து சோதனை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று நுகா்வோா் விவகாரங்கள் துறைச் செயலா் நிதி கரேவிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
அதற்கு அவா், ‘உணவுப் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கும். அவா்கள் அறிக்கையின் அடிப்படையில் அவசியமுள்ள சூழலில் எங்கள் துறையும் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடரும்’ என்றாா்.
வெளி பிரசாதங்களுக்குத் தடை
திருப்பதி லட்டு விவகாரத்தின் எதிரொலியாக உத்தர பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற மங்காமேஷ்வா் கோயிலில் பக்தா்கள் வெளியில் இருந்து வாங்கி வரும் பிரசாதங்களை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரசாதம் அல்லது பழங்களை மட்டும் பிரசாதமாக வழங்கலாம் என்று கோயில் நிா்வாகம் கூறியுள்ளது.