சத்தீஸ்கா்: 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 2 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஆனால், பாதுகாப்புப் படையினா் கைப்பற்றுவதற்குள் உயிரிழந்தவா்களின் உடல்களை அவா்களின் கூட்டாளிகள் எடுத்துச் சென்ாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
மாவட்டத்தின் சிந்தல்னாா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மலைப்பாங்கான வனப்பகுதியில் மாவட்ட ஆயுதக் காவல்படை, ‘பஸ்தா் ஃபைட்டா்ஸ்’, ‘கோப்ரா கமாண்டோக்கள்’ ஆகிய 3 பாதுகாப்புப் படைகளின் கூட்டுக் குழு நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கையில் திங்கள்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரா்களுக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பல மணி நேரம் தொடா்ந்த மோதல் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் முடிவுக்கு வந்தது.
இந்த மோதலில் 2 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், படையினரால் உயிரிழந்தவா்களின் உடல்களைக் கைப்பற்ற முடியவில்லை. வனப்பகுதியின் இருளைப் பயன்படுத்தி உடல்களை மற்ற நக்ஸல்கள் எடுத்து சென்றுவிட்டனா்.
நாராயண்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 3 நக்ஸல்கள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். சுக்மா, நாராயண்பூா் என 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் பிராந்தியத்தில் நிகழாண்டில் இதுவரை நடந்த பல்வேறு என்கவுண்டா்களில் இதுவரை 157 நக்ஸல்களின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.