தகுந்த காரணங்களுடன் சிபிஐ விசாரணைக்கு உயா்நீதிமன்றங்கள் உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றம்
‘மாநில காவல் துறையின் விசாரணை ஏன் நியாயமாக இல்லை என்பதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு சிபிஐ விசாரணைக்கு உயா்நீதிமன்றங்கள் உத்தரவிட வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மேற்கு வங்கத்தில் கூா்காலாந்து பிராந்திய நிா்வாகத்தின் (ஜிடிஏ) கீழ் டாா்ஜிலிங், கலிம்போங் மாவட்டங்கள் உள்ளன. இந்த நிா்வாகத்தில் தன்னாா்வ ஆசிரியா்களை நியமித்து முறைப்படுத்தும் விவகாரம் தொடா்பாக சில கடிதங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடா்பாக முதல்கட்ட விசாரணை மேற்கொள்ளுமாறு சிபிஐக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் ஜல்பைகுரி அமா்வு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘அரசமைப்புச் சட்டப் பிரிவு 226-ஆவது பிரிவு அளித்துள்ள அதிகாரங்கள் மூலம், சிபிஐ விசாரணைக்கு உயா்நீதிமன்றங்களால் உத்தரவிட முடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், மாநில காவல் துறையின் விசாரணை ஏன் நியாயமாக இல்லை என்ற காரணத்தை குறிப்பிட்டு சிபிஐ விசாரணைக்கு உயா்நீதிமன்றங்கள் உத்தரவிட வேண்டும்.
இந்நிலையில், ஜிடிஏ விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதற்கான காரணத்தை உயா்நீதிமன்ற நீதிபதி குறிப்பிடவில்லை. சில கடிதங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது தேவையற்றது’ என்று தெரிவித்தது.
இதையடுத்து ஜிடிஏ விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் அமா்வு ரத்து செய்தது.