உ.பி.: பராமரிப்பு இல்லாததால் தடம்புரண்டது சரக்கு ரயில்-விசாரணை அறிக்கையில் தகவல்
உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயிலின் 26 பெட்டிகள் தடம்புண்ட சம்பவத்தில், அந்த ரயில் உரிய முறையில் பராமரிக்கப்படாததே காரணம் என்று முதல்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் விருந்தாவன் சாலை ரயில் நிலையம் அருகே கடந்த 18-ஆம் தேதி நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டது. இதில் ரயிலின் 26 பெட்டிகள் துண்டு துண்டாக உடைந்து சிதறின. மூன்று தண்டவாளங்களில் பெட்டிகள் விழுந்ததால் அந்த வழித்தடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. வேறு சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லையென்றாலும், பெருமளவில் பொருள்சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், சரக்கு ரயில் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருந்ததே அது தடம்புரள காரணம் என்று ரயில்வேயின் முதல்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இச்சம்பவத்தில் விஷமிகளின் சதி எதுவும் இல்லை; ரயில் மற்றும் சரக்குப் பெட்டிகளை பராமரிக்கும் இயந்திரவியல் துைான் பொறுப்பு’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.