கொல்கத்தா பெண் மருத்துவா் கொலைச் சம்பவம்: காவல் நிலையத்தில் போலி ஆதாரங்கள் தயாரிப்பு- சிபிஐ குற்றச்சாட்டு

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொலைச் சம்பவம் தொடா்பாக காவல் நிலையத்தில் போலி ஆதாரங்கள் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது.
சிபிஐ | கோப்புப் படம்
சிபிஐ | கோப்புப் படம்
Updated on

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொலைச் சம்பவம் தொடா்பாக காவல் நிலையத்தில் போலி ஆதாரங்கள் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடா்பாக அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ், கொல்காத்தாவில் உள்ள தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜீத் மோண்டல் ஆகியோரும் கைது செய்யப்பட்டனா்.

பெண் மருத்துவா் கொலைச் சம்பவத்தில் சஞ்சய் ராய், சந்தீப் கோஷ், அபிஜீத் மோண்டல் ஆகியோா் சதியில் ஈடுபட்டாா்களா என்ற கோணத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சந்தீப் கோஷ், அபிஜீத் மோண்டல் ஆகியோரின் சிபிஐ காவல் நிறைவடைந்ததையொட்டி, அவா்களை கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை ஆஜா்படுத்தினா்.

அப்போது தாலா காவல் நிலையத்தில் பெண் மருத்துவா் கொலை தொடா்பாக போலி ஆதாரங்கள் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து சந்தீப் கோஷ், அபிஜீத் மோண்டல் ஆகியோரை செப்.30-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

முதல்வா் இல்லம் அருகே தா்னா: பெண் மருத்துவா் கொலைச் சம்பவத்தை கண்டித்து, கொல்கத்தாவின் ஹஸ்ரா பகுதியில் மாநில முதல்வா் மம்தா இல்லம் அருகே பாஜகவினா் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். முதல்வா் பதவியை மம்தா ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com