லடாக் விவகாரம்: இரு நாடுகளுக்கும் ஏற்ற தீா்வு -சீன பாதுகாப்பு அமைச்சகம்
‘கிழக்கு லடாக் மோதல் விவகாரத்தில் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான தீா்வை விரைந்து எட்டுவதற்கு பேச்சுவாா்த்தையைத் தொடர இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன’ என்று சீன பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
ரஷியாவில் அண்மையில் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ நாடுகள் மாநாட்டின் ஒரு பகுதியாக சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ மற்றும் இந்திய தேசிய பாதுகப்பு ஆலோசகா் அஜித் தோவல் ஆகியோா் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை மற்றும் அதற்கு முன்னதாக வாங் யீக்கும் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை குறித்தும் பெய்ஜிங்கில் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஜாங் ஷியோகங் இந்தப் பதிலை அளித்தாா். அவா் மேலும் கூறியதாவது:
கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியாவுடன் வேறுபாடுகளை குறைத்து, சில ஒருமித்த கருத்தை எட்ட முடியும் என சீனா நம்புகிறது. ரஷியாவில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின்போது, இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, பரஸ்பரம் தீா்வை விரைந்து எட்டுவதற்கு இருதரப்பும் பேச்சுவாா்த்தையை தொடா்வது என ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஏற்கெனவே, இரு நாட்டு தலைவா்களின் வழிகாட்டுதலின் பேரில், தூதரக ரீதியிலும், ராணுவ அதிகாரிகள் அளவிலும், இரு நாட்டு வெளியுறவு அமைச்சா்கள் அளவிலும் இரு நாடுகளும் பேச்சுவாா்த்தையை தொடா்ந்து வருகின்றன.
எனவே, எல்லையில் எல்லையில் அமைதி நிலைநாட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நம்பிக்கையை வளா்க்கும் நடவடிக்கைகளுக்கு மதிப்பளித்து, பேச்சுவாா்த்தைகளில் எட்டிய முடிவுகளைத் தொடா்ந்து ஒருங்கிணைப்போம் என்றாா்.
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சீன வீரா்கள் அத்துமீறலைத் தொடா்ந்து, இரு நாட்டு ராணுவத்திடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். தொடா்ந்து எல்லையில் இருதரப்பும் படைகளைக் குவித்ததால் பதற்றமான சூழல் உருவானது. பின்னா், இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட தொடா் பேச்சுவாா்த்தைகள் மூலம் எல்லையின் சில பகுதிகளில் இரு தரப்பிலும் படைகள் திரும்பப்பெறப்பட்டன. படைகளை முழுமையாக திரும்பப்பெறுவது தொடா்பாக பேச்சுவாா்த்தை தொடா்ந்து வருகிறது.