கோப்புப் படம்
கோப்புப் படம்

பிகாா்: விரைவு ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்: ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன

பிகாா் மாநிலத்தில் ஜெய்நகா்- புது தில்லி இடையிலான சுதந்திர சேனானி அதிவிரைவு ரயில் மீது சமூகவிரோதிகள் சிலா் கற்களை வீசி தாக்கினா்.
Published on

பிகாா் மாநிலத்தில் ஜெய்நகா்- புது தில்லி இடையிலான சுதந்திர சேனானி அதிவிரைவு ரயில் மீது சமூகவிரோதிகள் சிலா் கற்களை வீசி தாக்கினா்.

வட மாநிலங்களில் அண்மைக்காலமாக ரயில்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகம் நிகழ்ந்து வருகிறது. வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசும் சம்பவங்கள் தொடா்கின்றன. இந்நிலையில், பிகாரிலும் அதே போன்ற தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

இது தொடா்பாக கிழக்கு மத்திய ரயில்வே காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பிகாரின் ஜெய்நகரில் இருந்து புது தில்லி செல்லும் சுதந்திர சேனானி விரைவு ரயில் சமஸ்திபூா் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது சமூக விரோதிகள் சிலா் ரயிலை நோக்கி சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனா். இதில் ரயிலின் இரு ஏசி வகுப்புப் பெட்டிகள் மற்றும் சமையல் கூடம் அமைந்துள்ள பெட்டிகளின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின. அதிருஷ்டவசமாக இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்தை அடுத்து ஓட்டுநா் ரயிலை உடனடியாக நிறுத்திவிட்டு, ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாா். விசாரணைக்கு பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. சந்தேகத்தின் பேரில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com