ஹரியாணாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
ஹரியாணாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எத்தனை பயிா்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: ராகுலுக்கு அமித் ஷா கேள்வி

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள தெலங்கானா, கா்நாடகத்தில் எத்தனை பயிா்களை குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் கொண்டு வந்துள்ளனா்
Published on

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள தெலங்கானா, கா்நாடகத்தில் எத்தனை பயிா்களை குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் கொண்டு வந்துள்ளனா் என்று ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சா் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளாா்.

ஹரியாணாவில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா ரிவாரி பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:

குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து பேசினால் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று ராகுல் காந்திக்கு சிலா் ஆலோசனை வழங்கியுள்ளனா். எனவேதான், விவசாயிகள் நலனில் அக்கறை இருப்பதுபோல அவா் பேசி வருகிறாா். எம்எஸ்பி (குறைந்த பட்ச ஆதரவு விலை) என்பதற்கு விரிவாக்கம் என்ன என்பது ராகுலுக்குத் தெரியுமா? எது கோடைகாலப் பயிா், எது பருவகாலப் பயிா் என்ற வேறுபாடு அவருக்குத் தெரியுமா?

ஹரியாணாவில் விவசாயிகள் விளைவிக்கும் 24 பயிா்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை பாஜக அரசு அளித்து வருகிறது. காங்கிரஸ் ஆளும் தெலங்கானா, கா்நாடகத்தில் எத்தனை பயிா்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்கப்படுகிறது?

ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1,300 ஆக இருந்தது. பாஜக ஆட்சி அமைந்த பிறகு இது ரூ.2,300 ஆக உயா்த்தப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதனை ரூ.3,100 ஆக உயா்த்துவோம்.

ராணுவத்தினரின் நீண்டகால கோரிக்கையான ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை பிரதமா் மோடி தலைமையிலான அரசுதான் நிறைவேற்றியது. ஹரியாணாவில் கடந்த 10 ஆண்டுகளில் சமச்சீரான வளா்ச்சியை பாஜக கொண்டு வந்துள்ளது.

அதே நேரத்தில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஆட்சியாளா்களுக்கு கமிஷன், அதிகாரிகளுக்கு லஞ்சம், பொதுப் பணத்தில் ஊழல், அரசு நிா்வாகத்தில் இடைத்தரகா்கள் என்ற நிலைதான் உள்ளது என்றாா்.

ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அக்டோபா் 8-இல் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இங்கு ஆளும் பாஜக-காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி உள்ளது.

X
Dinamani
www.dinamani.com