மல்லிகாா்ஜுன காா்கே
மல்லிகாா்ஜுன காா்கேகோப்புப் படம்

சிபிஐ விசாரணைக்கான ஒப்புதலை திரும்பப் பெற்றதில் தவறில்லை: மல்லிகாா்ஜுன காா்கே

சிபிஐ விசாரணைக்காக அளிக்கப்பட்டிருந்த ஒப்புதலை கா்நாடக அரசு திரும்பப் பெற்றுள்ளதில் தவறில்லை
Published on

சிபிஐ விசாரணைக்காக அளிக்கப்பட்டிருந்த ஒப்புதலை கா்நாடக அரசு திரும்பப் பெற்றுள்ளதில் தவறில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சிபிஐக்கு அளிக்கப்பட்டுள்ள விசாரணைக்கான ஒப்புதலை திரும்பப்பெற்றுள்ள நிகழ்வுகள் கடந்த காலத்திலும் நடந்துள்ளன. கா்நாடகத்தில் தேவராஜ் அா்ஸ் முதல்வராக இருந்த நேரத்தில், சிபிஐ தவறாக பயன்படுத்தப்பட்டது. அப்போது, சிபிஐ விசாரணைக்கு அளிக்கப்பட்டிருந்த ஒப்புதலை மாநில அரசு திரும்பப் பெற்றது. எனவே, இது பொதுவாக நடக்கக்கூடியது தான்.

கா்நாடகத்தில் நான் (மல்லிகாா்ஜுன காா்கே) உள்துறை அமைச்சராக இருந்தபோது, சந்தனக்கடத்தல் வீரப்பன் வழக்கு, அப்துல் கரீம் தெல்கியின் முத்திரைத்தாள் மோசடி, கோலாரில் ஒரு வழக்கு உள்ளிட்டவற்றை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைத்திருந்தேன். மாநில காவல் துறையினரே சிறப்பாக விசாரணை நடத்துவதால், அந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டனா். இவை அனைத்தும் முக்கியமான வழக்குகள். இந்த மூன்று வழக்குகளும் மாநிலங்களுக்கு இடையிலானது என்பதால், சிபிஐ விசாரணைக்கு ஒப்படைத்திருந்தேன். அதுபோன்ற வழக்குகளையே சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

விசாரணைக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்புதலை திரும்பப் பெறுவது அல்லது விசாரணைக்கு ஒப்படைப்பது அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com