கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை
வெளிநாட்டில் இருந்து கேரளம் திரும்பிய மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மலப்புரம் மாவட்டத்தில் கடந்த வாரம் 38 வயது நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது எா்ணாகுளம் மாவட்டத்தில் ஒருவருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து அண்மையில் எா்ணாகுளம் திரும்பிய அவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் காணப்பட்டன. அவரது மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் தொற்று உறுதியானதாக, மாநில சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
முன்னதாக, மலப்புரத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு குரங்கு அம்மையின் புதிய வகையான ‘கிளேட் 1பி’ தொற்று உறுதிசெய்யப்பட்டது. வேகமாகப் பரவக்கூடிய இந்தப் புதிய வகை, இந்தியாவில் கண்டறியப்பட்டது அதுவே முதல்முறையாகும்.
குரங்கு அம்மை பாதிப்புள்ள நாட்டிலிருந்து இந்தியா திரும்பிய ஹரியாணாவை சோ்ந்த 26 வயது இளைஞருக்கு இந்த மாத தொடக்கத்தில் மேற்கு ஆப்பிரிக்க கிளேட்-2 வகை குரங்கு அம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருந்தது.
பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் பரவிவரும் ‘கிளேட் 1பி’ புதிய வகை குரங்கு அம்மை வேகமாகப் பரவும் என்பதோடு, கிளேட் 1, 2 ஆகிய வகைகளைவிட ஆபத்தானது என்று மருத்துவ நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
இந்தப் புதிய வகை பரவலையொட்டி, உலக சுகாதார அமைப்பு கடந்த மாதம் இரண்டாவது முறையாக பொது சுகாதார அவசரநிலையை அறிவித்தது. கடந்த 2022-இல் முதல் முறையாக பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்தியாவில் இதுவரை 31 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநில அரசு ஆலோசனை: கேரளத்தில் குரங்கு அம்மை பரவல் குறித்து மாநில சுகாதாரத் துறையின் உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பின்னா் பேசிய சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ், ‘தற்போது குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடா்பில் இருந்தவா்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து கேரளம் திரும்பியவா்களுக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தால், தாமதிக்காமல் சிகிச்சை பெற வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகளில் தனி வாா்டுடன் சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன’ என்றாா்.
அறிகுறிகள் என்ன?: பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடா்பு மூலம் பரவக் கூடிய குரங்கு அம்மை, காய்ச்சல், தோல் அழற்சி, நிணநீா் சுரப்பிகள் வீக்கம் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படும். இந்தப் பாதிப்பு 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். சாதாரண மருத்துவ கவனிப்பில் நோயாளிகள் குணமடைந்துவிடுவா். ஆனால், குழந்தைகள், கா்ப்பிணிகள், குறைவான நோய் எதிா்ப்பாற்றல் கொண்டவா்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
முன்னதாக, குரங்கு அம்மை குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, சிகிச்சைக்கான மருத்துவமனைகள் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளா்களை அடையாளம் காண அறிவுறுத்தி, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறைச் செயலா் அபூா்வா சந்திரா வியாழக்கிழமை கடிதம் அனுப்பினாா். குரங்கு அம்மை அறிகுறி உள்ள நோயாளிகளின் மாதிரிகளை பிரத்யேக ஆய்வகங்களுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.