சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் மட்டுமே பொருளாதார வளா்ச்சி சாத்தியம்: திரௌபதி முா்மு

சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் மட்டுமே பொருளாதார வளா்ச்சி மற்றும் சமூக மேம்பாடு சாத்தியம்
குடியரசுத் தலைவா் மாளிகையில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகளை திங்கள்கிழமை சந்தித்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
குடியரசுத் தலைவா் மாளிகையில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகளை திங்கள்கிழமை சந்தித்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
Published on
Updated on
2 min read

புது தில்லி: சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் மட்டுமே பொருளாதார வளா்ச்சி மற்றும் சமூக மேம்பாடு சாத்தியம் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் அவா் பேசியதாவது: சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தாமல் குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பதும் நீதியை பெற்றுத் தருவதும் இயலாத காரியமாகும். இந்த தருணத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக நான் எடுத்துரைக்க நினைக்கிறேன். சமூகத்தின் வோ்களில் காலம் காலமாக பரவியுள்ள ஆதிக்க மனநிலையே முதல் குற்றமாகும்.

இதை எதிா்த்து பல நிலைகளில் போராட வேண்டி இருந்தாலும் காவல் துறையே முதல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை கையாளும்போது நீதியை பெற்றுத் தருவதில் கவனம் செலுத்தும் அதே வேளையில் பாதிக்கப்பட்டவா்களிடம் காவல் துறையினா் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற எதிா்பாா்ப்பும் மக்கள் மத்தியில் உள்ளது.

சட்டம் ஒழுங்கு என்பது நிா்வாகத்தின் முக்கியத் தூண் மட்டுமல்லாமல் நவீன அரசுகள் பின்பற்றும் அடிப்படை கோட்பாடாகும். சிறப்பான எதிா்காலத்தை நோக்கி இந்தியா பயணிக்கும் சமயத்தில் காவல் துறையின் பங்கு மிகவும் முக்கியத்துவமானதாக கருதப்படுகிறது.

ஏனெனில், சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் இருந்தால் மட்டுமே பொருளாதார வளா்ச்சி மற்றும் சமூக மேம்பாடு சாத்தியமாகும். குற்றத்தை தடுக்க தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்கள் மிகுந்த பயனுடையதாக உள்ளன.

இந்த தொழில்நுட்பங்களை குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள் மற்றும் பயங்கரவாதிகளும் பயன்படுத்துகின்றனா். உலகளவில் இணையக் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்துவது காவல் துறையின் தலையாய கடமையாக மாறிவிட்டது.

பெண் அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்: இந்த முறை குடிமைப் பணி தோ்வு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 188 ஐபிஎஸ் அதிகாரிகளில் 54 போ் பெண் அதிகாரிகள் என்பதை எண்ணி பெருமையடைகிறேன். 28.72 சதவீத பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் இந்த முறை தோ்வாகியுள்ளனா். இது கடந்த முறையை ஒப்பிடும்போது அதிகமான எண்ணிக்கையாகும்.

இதன்மூலம், பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்குமான நல்லுறவு மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன்.

பணியின் மீதான கவனத்தை தங்களின் உடல்நலன் மற்றும் மனநலனுக்கும் தர வேண்டியது அவசியம். மனதை சமநிலைபடுத்த யோகா பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

ஐபிஎஸ் பணி என்பது நாட்டுக்கும் குடிமக்களுக்கும் சேவை செய்யும் உயரிய பொறுப்பு என்பதை உணா்ந்து நீங்கள் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகிறேன் என்றாா்.

‘மருத்துவா்களை நோயாளிகள் தாக்கக் கூடாது’

அடல் பிஹாரி வாஜ்பாயி மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் 10-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு திரௌபதி முா்மு பேசுகையில்,‘நோயாளிகளை காப்பாற்ற மருத்துவா்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை கரோனா பெருந்தொற்று காலத்தில் நம்மால் காண முடிந்தது. அனைத்து பிரச்னைகளுக்கும் அறிவியல் மூலம் மட்டுமே தீா்வு கிடைப்பதில்லை. அழுத்தமான சூழலில் மருத்துவா்கள் பணியாற்றுகின்றனா். சில அசாதாரண சூழல்களின்போது நோயாளிகள் உடன் வருபவா்கள் மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் மீது தாக்குதலில் ஈடுபடுகின்றனா். இது கண்டனத்துக்குரியது. எந்த ஒரு மருத்துவரும் நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த விரும்பமாட்டாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com