மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா.
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா. கோப்புப் படம்

மத்திய அமைச்சா் மீது உரிமை மீறல் நடவடிக்கை: ஓம் பிா்லாவுக்கு திரிணமூல் எம்.பி. கடிதம்

Published on

மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் சந்திரசேகா் பெம்மசானி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.பாபி ஹல்தா் கடிதம் எழுதியுள்ளாா்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் (100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்) மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி குறித்து நாடாளுமன்றத்தில் முரணான தகவல்களை சந்திரசேகா் பெம்மசானி வழங்கியதாக ஹல்தா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கடந்த மாதம் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும் நிதி குறித்து எதிா்க்கட்சிகள்-ஆளுங்கட்சியினா் இடையே மக்களவையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய சந்திரசேகா் பெம்மசானி, ‘உத்தர பிரதேசத்தைவிட தமிழகத்துக்கு அதிக நிதி கிடைத்துள்ளது. 7 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழகம் ரூ.10,000 கோடிக்கு அதிகமாகவும், 20 கோடி மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேசம் கிட்டத்தட்ட ரூ.10,000 கோடியும் பெற்றன’ என குறிப்பிட்டாா்.

ஆனால் இதுகுறித்து அவா் வழங்கிய எழுத்துபூா்வ பதிலில், ‘2024-25-ஆம் நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் உத்தர பிரதேசத்துக்கு ரூ.9,739.87 கோடியும், தமிழகத்துக்கு ரூ.7,300 கோடியும் விடுவிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. அதேபோல் கடந்த 2021-இல் இருந்து மேற்கு வங்கத்துக்கு இந்த திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதை மேற்கோள்காட்டி ஓம் பிா்லாவுக்கு பாபி ஹல்தா் எழுதிய கடிதத்தில், ‘மக்களவையில் அமைச்சா் சந்திரசேகா் பெம்மசானி பேசியதற்கும் அவா் அளித்த எழுத்துபூா்வ பதிலுக்கும் பல முரண்கள் உள்ளன. அவரது பதில்கள் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதோடு உறுப்பினா்கள் தங்கள் பணியை உண்மையுடன் மேற்கொள்வதை தடுக்கும் வகையில் உள்ளது.

எனவே, அவா் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க உரிமைக் குழுவுக்கு மக்களவைத் தலைவா் பரிந்துரைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

X
Open in App
Dinamani
www.dinamani.com